கர்ணனின் வீரத்தை புகழ்ந்துதள்ளிய கண்ணன்.
பொறாமை கொண்ட அர்ஜுனன். பாரதப்போரில் கர்ணணுக்கும் அர்ஜூனனுக்கும் இடையே துவந்த யுத்தம் நடைபெற்று வந்தது. (துவந்த யுத்தம் என்பது இருவருக்கு இடையே மட்டும் நடக்கும் போர்.) மிகவும் ஆக்ரோஷமான போர். இந்த துவந்த யுத்தமானது யாருக்கு வெற்றி கிட்டும் என்று யூகிக்கவே முடியாத அளவு கடுமையாக இருந்தது. ஒரு கட்டத்தில் பார்த்தன் மிகவும் சக்தி வாய்ந்த அஸ்திரம் ஒன்றை எய்து கர்ணனின் தேரை நூறு கஜம் தூரத்திற்கு தள்ளிவிட்டான். (ஒரு கஜம் என்பது 3 அடிகளாகும்). ஆனால் மீண்டும் முன்னேறிய கர்ணன், அதே போன்றதொரு சக்தி மிக்க அஸ்திரம் ஒன்றை அர்ஜூனனின் தேர் மீது எய்தான். அதனால் பத்து கஜ தூரத்திற்கு பின்னோக்கி சென்றது பார்த்தனின் தேர்.
அப்போது தேரில் சாரதியாயிருந்த ஸ்ரீ கிருஷ்ணர் “ஆஹா.. அற்புதம்… அற்புதம்” என்று தன்னையுமறியாமல் கர்ணனின் பராக்கிரமத்தை சிலாகித்துக் கூவினார்.
அர்ஜூனனுக்கு ஒரு பக்கம் ஆச்சரியம். மறுபக்கம் பொறாமை.
“நாம் இதே அஸ்திரத்தை எய்து கர்ணனின் தேரை நூறு கஜ தூரத்திற்கு தள்ளியதை இந்த கண்ணன் சிலாகிக்கவில்லை. பாராட்டவில்லை. ஆனால் கர்ணனோ வெறும் பத்து கஜ தூரத்திற்கு நம் தேரை தள்ளியதை மெச்சுகிறானே… இதென்ன அநியாயம்? இதென்ன விந்தை?”
“அதுமட்டுமல்லாமல் இதற்கு முன் கர்ணன், என் கிரீடத்தை தனது அஸ்திரத்தால் வீழ்த்தியபோது கூட அவனை மெச்சவில்லை. சொல்லப்போனால் இதைவிட அது பெரிய தீரச் செயல். அப்போது அவனை பாராட்டதவன் இப்போது மட்டும் ‘ஆஹோ ஓஹோ’ என்று பாராட்டுகிறானே? அதுவும் நான் செய்ததில் பத்தில் ஒரு பங்கே அவன் செய்தமைக்கு?” இவ்வாறாக காண்டீபனின் மனதில் ஐயங்கள் ஓடிக்கொண்டிருந்தன.
அர்ஜூனன் மனதில் இத்தகு சந்தேகம் ஓடிக்கொண்டிருப்பது பரந்தாமனுக்கு தெரியாதா என்ன? அவனாக கேட்கட்டும் நாம் சொல்லலாம் என்று காத்திருந்தான்.
கண்ணன் நினைத்தது போல அர்ஜூனன் தன் மனதை குடைந்துகொண்டிருந்த சந்தேகத்தை கண்ணனிடம் கேட்டேவிட்டான்.
“மதுசூதனா…. கர்ணன் தனது அஸ்திரத்தால் எனது கிரீடத்தை பறக்கச் செய்தபோது கூட நீ சிலாகிக்கவில்லை. ஆனால், என்னை விட பத்தில் ஒரு பங்கு தேரை அஸ்திரத்தால் தள்ளியதற்கு நீ மெச்சினாயே… ஏன்?”
தூரக்கணக்கும் பாரக்கணக்கும்!
கிருஷ்ண பரமாத்மா அவனை நோக்கி ஒரு மெல்லிய புன்னகையை உதிர்த்துவிட்டு பேச ஆரம்பித்தார்…
“அர்ஜூனா நீ கர்ணனின் தேரை நூறு கஜ தூரம் தள்ளினாய்… அவன் பதிலுக்கு அஸ்திரப் பிரயோகம் செய்து உன் தேரை பத்து கஜ தூரம் தான் தள்ளினான். இருப்பினும் அவன் செயல் தான் உன் செயலை விட பாராட்டத்தக்கது. ஏனெனில்… இது தூரக் கணக்கு அல்ல. பாரக்கணக்கு. அவன் தேரைப்போலவே உன் தேரிலும் ஒரு தேரோட்டியும் ஒரு வீரனும் நின்று கொண்டிருப்பதாக நீ நினைத்துகொண்டிருக்கிறாய். உண்மை அதுவல்ல.
உன் தேர்க்கொடியை பார். அந்தக் கொடியில் அஞ்சனை மைந்தன் அனுமன் இருக்கிறான்.
ஏதோ அவன் உருவம் மட்டும் கொடியில் அடையாளத்துக்காக பொறிக்கப்பட்டிருப்பதாக நினைத்துக்கொண்டிருக்கிறாய். ஆனால் உண்மையில் அந்த உருவத்தில் அனுமன் ஆவிர்பவித்திருக்கிறான் என்பதை மறந்துவிட்டாயா? அனுமன் இருக்குமிடம் மந்திர தந்திரங்கள் பலனற்று போகும் என்பதால் நான் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, உன்னைக் காக்க உன் தேரில் உன்னுடன் இருக்கிறார்.
அவ்வப்போது தனது சக்தியை வெளிப்படுத்தி உனக்கு உதவிக்கொண்டிருக்கிறார். அவர் மட்டும் இல்லையேல் என்றோ மந்திர அஸ்திரங்கள் உன் தேரை சாம்பலாக்கியிருக்கும். கர்ணன் உன் தேரைப் பின்னுக்கு தள்ள அஸ்திரம் எய்தபோது, அனுமன் ‘மகிமா’ என்னும் சித்தியை பயன்படுத்தி (அஷ்டமா சித்திகளுள் ஒன்று இது!) மலை போன்ற கணமுடையவராக மாறி உன்னை காத்தார். உன் தேரை அசையவிடாமல் செய்தார்.
ஆனால், ஆஞ்சநேயனின் சக்தியையும் மீறி கர்ணனின் அம்பு உன் தேரை பத்து கஜ தூரம் பின்னுக்கு தள்ளியது. அப்படியென்றால் அவன் அஸ்திர பிரயோகதின் தீரத்தை நீயே பார்த்துக்கொள். எனவே தான் கர்ணனை மெச்சினேன்” என்றான் பார்த்தசாரதி.
இதைக் கேட்ட அர்ஜூனன் வெட்கி தலைகுனிந்தான். “உண்மை தான் கண்ணா… உன் சக்தியாலும் அனுமனின் சக்தியாலும் தான் நான் தாக்குப்பிடிக்கிறேன். கர்ணனை போன்ற மாவீரனிடம் துவந்த யுத்தம் செய்வதே எனக்கு பெருமை தான்….”
என்றான்.