Followers

Monday, October 28, 2024

காசி யாத்திரை 6 மற்றும் 7ம் நாள்

 14.09.24 மற்றும் 15.09.24

அயோத்தியில் இருந்து அன்று இரவு காசி அடைந்து விமானம் மூலம் சென்னை செல்ல வேண்டி இருந்ததால் காலையில் எழுந்து நேராக சரயு நதிக்கு சென்று தீர்த்தம் தெளித்துக் கொண்டோம். பின்னர் அங்கிருந்து நேராக அனுமன் கோவிலுக்கு சென்றால் அங்கு சனிக்கிழமை என்பதால் கூட்டம் அதிகமாக இருந்தது.. தரிசனம் செய்ய நின்றோம் என்றால் ராமர் கோவில் செல்ல நேரமாகிவிடும். கோவில் கோபுரத்தின் டிவி திரையில் காண்பித்த அனுமனின் தரிசனம் பெற்று ராமர் கோவில் அடைந்தோம். வீல் சேர் ஆள் ஒன்றுக்கு ரூபாய் 150- கட்டணம் செலுத்தி சிறப்பு வழியாக சென்றோம். வீல் சேருடன் உதவிக்கு ஒருவர் வீதமாக அனுமதி என்பதால் நானும் வீல்சேர் பயன்படுத்தி சன்னதி அடைந்தேன். நல்ல தரிசனம்.  இந்த வாய்ப்பு கிடைக்க பெற்றது பெரும் பாக்கியம். அனைவருக்கும் இந்த பாக்யம் கிடைக்க வேண்டும் என்று பிரார்த்தித்து வந்த பிறகு, தெரு ஓர கடையில் ஷாப்பிங் செய்தோம்.  இந்த அவசர கோலத்தில் ராமர் கோவில் முழு கோபுர தரிசனம் காண இயலவில்லையோ அல்லது தவறவிட்டோமோ? ஆண்டவன் விட்ட வழி.. என்ன செய்ய முடியும். புத்த கயா, கயா மற்றும் அயோத்தியில் காசியை விட பிச்சைக்காரர்கள் அதிகமாக இருந்தனர். அதிலும் பிச்சைக்கார சிறார்கள் அதிகம் தென்பட்டனர்.  நான் கடவுள் திரைப்படத்தை நினைவூட்டியது. நான் ஒரு பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தேன் என்ற பாடலும் குணா படப் பாடலும் ஏனோ வாய் முனுமுனுத்தது. பின்னர் விடுதிக்கு சென்று காலை உணவு அருந்திவிட்டு விடுதிக்கு முன் போட்டோ எடுத்துக் கொண்டு பதினோரு மணி வாக்கில் வேன் மூலம் காசி விமான நிலையம் நோக்கி புறப்பட்டோம்.  வழியில் பதல்பூர் என்ற ஊரின் மோட்டலில் மதிய உணவு அருந்திவிட்டு,இரவு‌ உணவாக இட்லி,சட்னி மற்றும் சாம்பார் தயார் செய்யச் சொல்லி பார்சல் வாங்கி கொண்டு 6.30 மணி அளவில் காசி விமான நிலையம் அடைந்தோம். அங்கு வழிகாட்டி மற்றும் வேன் டிரைவருடன் குரூப் போட்டோ எடுத்து கொண்டோம். போர்டிங் பாஸ் பெறுவதற்கு முன்னர் அனைவரும் இட்லி அருந்திவிட்டு பின்னர் செக் இன் செய்து விமானத்திற்காக காத்துக் கொண்டு இருந்தோம். இரவு விமானம் வர தாமதமானது.  பின்னர் விமானம் ஏறி சென்னை சென்றடைந்தால் என்னுடைய லக்கேஜ் ஒன்று கிடைக்க பெறாமல் போய்விட்டது.அதனை உரிய நபரிடம் தெரிவித்து புகார் படிவம் கொடுத்து விட்டு வெளியே வந்து டாக்ஸி பிடித்து எக்மோர் இரயில் நிலையம் அடைய இரண்டு மணி ஆகிவிட்டது. எக்மோர் இரயில் நிலையத்தில் வெயிட்டிங் ஹாலில் அமர்ந்து 5.15 மணி அளவில் தேஜஸ் விரைவு வண்டியில் ஏறி அமர்ந்தோம். சரியாக காலை ஆறு மணிக்கு கிளம்பிய வண்டி 12 மணி அளவில் மதுரை வந்தடைந்தோம். உத்தரப் பிரதேசம் மற்றும் பீகாரை விட வெயிலின் தாக்கம் மதுரையில் அதிகம் இருந்தது.கிட்டத்தட்ட 3000 கிமீ தாண்டி பயணப்பட்டு திரும்பி வந்தடைந்தோம்.சென்னை - காசி, காசி - சென்னை விமான பயணமாக இருந்ததால் பயண நாட்கள் குறைந்து போயின.இனி அடிக்கடி காசி மற்றும் அயோத்தி போக வேண்டும் என்ற எண்ணம் வருகின்றது.

நேரமின்மையால் காசி மற்றும் அயோத்தியில் சில இடங்களை சுற்றி பார்க்க இயலவில்லை.சியாம் சுந்தர் மற்றும் விஜய் சுந்தர் யாரேனும் ஒருவர் வந்திருந்தால் ஃபோட்டோ நல்ல முறையில் எடுத்திருப்போம் .

யாத்திரை சுகமாக நிறைவுபெற்றது. எல்லாம் அவன் செயல் 

ஓம் நமசிவாய !

Jai Shri Ram!

காசி யாத்திரை 5ம் நாள்

 13.09.24

காசியில் காலை உணவு அருந்திவிட்டு வேன் மூலம் பிரயாக்ராஜ் சென்று படகு மூலம் திரிவேணி சங்கமம் அடைந்து ஆற்றில் குளித்து சுமங்கலி பூஜை மற்றும் பூமுடி கொடுத்து வந்தோம். பூஜை செய்த பண்டிட் ஆயிரம் ரூபாய் வாங்கி கொண்டு டிப்ஸ் வேறு (தட்சினை) பெற்றுக்கொண்டார். படகு ஓட்டி, ஆற்றில் குளிக்க ஏற்றி இறக்கி விட்டவர்களும் டிப்ஸ் பெற்றுக் கொண்டனர்.  பின்னர் அனுமன் கோவிலுக்கும் , (பொள்ளாச்சி மாசாணி அம்மன் படுத்து இருப்பது போல் அனுமன் சயனத்தில் இருந்தார்)அலோப சங்கரி பீடத்தில் (பீடத்தின் பெயர் தமிழில் இருந்தது)தரிசனம் முடித்து கொண்டு அயோத்தி சென்று அடைய இரவு பத்து மணி ஆகிவிட்டது.  ராம ஜென்ம பூமியில் Hotel bedis dreamland என்ற தங்கும் விடுதிக்கு சென்று இரவு உணவு அருந்தி மறுநாள் ராமரை தரிசித்து காசி புறப்பட்டு ஊர் திரும்ப வேண்டி இருந்ததால் பாக்கிங் செய்து உறங்கச் செல்ல இரவு 12 மணி ஆகிவிட்டது 

Jai Sri Ram !

காசி யாத்திரை... மூன்றாம் நாள்

 11.09.24

காசியில் காலை குளித்து காலை உணவு உண்டபின் புதிய வழிகாட்டி சிவம் என்பவருடன் குளிர்சாதன வேனில் புத்தகயா புறப்பட்டோம்.

மதிய உணவு ரிலையன்ஸ் பெட்ரோல் பங்க் அருகில் இருந்த ஹோட்டலில் உண்டபின் பயணம் தொடர்ந்தோம். புத்த கயா சென்றடைய மாலை நேரம் ஆகிவிட்டது. புத்த கயாவில் புத்தர் சிலை மற்றும் புத்தர் கோயில்களை பார்த்த பின்னர் புத்தர் ஞானம் பெற்ற போதிமரம் பார்த்தோம். புட்டபர்த்தி சென்ற உணர்வு ஏற்பட்டது. போதி மரத்திற்கு அடுத்து இருந்த ஜெகன்னாதர் ஆலயம்  சென்று வழிபட்ட பின்னர் புத்த கயா ரெஜன்சி என்ற தங்கும் விடுதிக்கு சென்றோம். விடுதி நிர்வாகத்தினரால் அனைவருக்கும் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இத்தகைய வரவேற்பினை வீடியோ எடுத்திருக்க வேண்டும். தவறிவிட்டது குறையே. இக்குறையை டிராவல்ஸ் 

நிறுவனத்தினரிடம் தெரிவிக்கவேண்டும்.

இரவு உணவருந்தி தூங்க கிளம்பி விட்டோம்.


நான்காம் நாள்..12.09.24

கயா மற்றும் காசி 

காசியில் கங்கா ஆரத்தி மற்றும் காலபைரவர் கோவில் செல்ல இயலாததால் கயாவில் திதி முடித்து விஷ்ணுபாத கோவிலை தரிசித்த பின் வேன் மூலம் காசி புறப்பட்டு மாலையில் காசியில் உள்ள ஹசி காட்டிற்கு சென்று கங்கா ஆரத்தி கண்டு களித்தோம். ஆரத்திக்கு முன் மந்திரம் சொல்லப்பட்டது பெருமாள் மற்றும் கிருஷ்ணர் பாடல்களும் பாடப்பட்டது. ஆரத்திக்கு முன் அவரவர் கோத்திரம் நட்சத்திரம் பெயர் சொல்லி பிரார்த்தனை செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார்கள்..சாய்பிரசாத் பெயர் நட்சத்திரம் சொல்லியும் பிரார்த்தனை செய்து கொண்டேன். ஆரத்தி நடக்கும் சமயம் கங்கை ஆற்றில் விளக்குகள் மின்ன படகுகள் சென்ற காட்சி கண்ணுக்கு விருந்தாக இருந்தது. ஆரத்தி நிகழ்ச்சிகள் அருமையாகவும் பக்திபரவசம் ஊட்டுவதாகவும் இருந்தது.  பின்னர் ஆட்டோவில் பயணித்து சின்னஞ் சிறு வீதியின் வழியாக நடந்து சென்று கால பைரவரை தரிசித்த பின் விடுதிக்கு சென்று இட்லி மற்றும் தோசை உண்டபின் உறங்கச் சென்றோம் .