14.09.24 மற்றும் 15.09.24
அயோத்தியில் இருந்து அன்று இரவு காசி அடைந்து விமானம் மூலம் சென்னை செல்ல வேண்டி இருந்ததால் காலையில் எழுந்து நேராக சரயு நதிக்கு சென்று தீர்த்தம் தெளித்துக் கொண்டோம். பின்னர் அங்கிருந்து நேராக அனுமன் கோவிலுக்கு சென்றால் அங்கு சனிக்கிழமை என்பதால் கூட்டம் அதிகமாக இருந்தது.. தரிசனம் செய்ய நின்றோம் என்றால் ராமர் கோவில் செல்ல நேரமாகிவிடும். கோவில் கோபுரத்தின் டிவி திரையில் காண்பித்த அனுமனின் தரிசனம் பெற்று ராமர் கோவில் அடைந்தோம். வீல் சேர் ஆள் ஒன்றுக்கு ரூபாய் 150- கட்டணம் செலுத்தி சிறப்பு வழியாக சென்றோம். வீல் சேருடன் உதவிக்கு ஒருவர் வீதமாக அனுமதி என்பதால் நானும் வீல்சேர் பயன்படுத்தி சன்னதி அடைந்தேன். நல்ல தரிசனம். இந்த வாய்ப்பு கிடைக்க பெற்றது பெரும் பாக்கியம். அனைவருக்கும் இந்த பாக்யம் கிடைக்க வேண்டும் என்று பிரார்த்தித்து வந்த பிறகு, தெரு ஓர கடையில் ஷாப்பிங் செய்தோம். இந்த அவசர கோலத்தில் ராமர் கோவில் முழு கோபுர தரிசனம் காண இயலவில்லையோ அல்லது தவறவிட்டோமோ? ஆண்டவன் விட்ட வழி.. என்ன செய்ய முடியும். புத்த கயா, கயா மற்றும் அயோத்தியில் காசியை விட பிச்சைக்காரர்கள் அதிகமாக இருந்தனர். அதிலும் பிச்சைக்கார சிறார்கள் அதிகம் தென்பட்டனர். நான் கடவுள் திரைப்படத்தை நினைவூட்டியது. நான் ஒரு பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தேன் என்ற பாடலும் குணா படப் பாடலும் ஏனோ வாய் முனுமுனுத்தது. பின்னர் விடுதிக்கு சென்று காலை உணவு அருந்திவிட்டு விடுதிக்கு முன் போட்டோ எடுத்துக் கொண்டு பதினோரு மணி வாக்கில் வேன் மூலம் காசி விமான நிலையம் நோக்கி புறப்பட்டோம். வழியில் பதல்பூர் என்ற ஊரின் மோட்டலில் மதிய உணவு அருந்திவிட்டு,இரவு உணவாக இட்லி,சட்னி மற்றும் சாம்பார் தயார் செய்யச் சொல்லி பார்சல் வாங்கி கொண்டு 6.30 மணி அளவில் காசி விமான நிலையம் அடைந்தோம். அங்கு வழிகாட்டி மற்றும் வேன் டிரைவருடன் குரூப் போட்டோ எடுத்து கொண்டோம். போர்டிங் பாஸ் பெறுவதற்கு முன்னர் அனைவரும் இட்லி அருந்திவிட்டு பின்னர் செக் இன் செய்து விமானத்திற்காக காத்துக் கொண்டு இருந்தோம். இரவு விமானம் வர தாமதமானது. பின்னர் விமானம் ஏறி சென்னை சென்றடைந்தால் என்னுடைய லக்கேஜ் ஒன்று கிடைக்க பெறாமல் போய்விட்டது.அதனை உரிய நபரிடம் தெரிவித்து புகார் படிவம் கொடுத்து விட்டு வெளியே வந்து டாக்ஸி பிடித்து எக்மோர் இரயில் நிலையம் அடைய இரண்டு மணி ஆகிவிட்டது. எக்மோர் இரயில் நிலையத்தில் வெயிட்டிங் ஹாலில் அமர்ந்து 5.15 மணி அளவில் தேஜஸ் விரைவு வண்டியில் ஏறி அமர்ந்தோம். சரியாக காலை ஆறு மணிக்கு கிளம்பிய வண்டி 12 மணி அளவில் மதுரை வந்தடைந்தோம். உத்தரப் பிரதேசம் மற்றும் பீகாரை விட வெயிலின் தாக்கம் மதுரையில் அதிகம் இருந்தது.கிட்டத்தட்ட 3000 கிமீ தாண்டி பயணப்பட்டு திரும்பி வந்தடைந்தோம்.சென்னை - காசி, காசி - சென்னை விமான பயணமாக இருந்ததால் பயண நாட்கள் குறைந்து போயின.இனி அடிக்கடி காசி மற்றும் அயோத்தி போக வேண்டும் என்ற எண்ணம் வருகின்றது.
நேரமின்மையால் காசி மற்றும் அயோத்தியில் சில இடங்களை சுற்றி பார்க்க இயலவில்லை.சியாம் சுந்தர் மற்றும் விஜய் சுந்தர் யாரேனும் ஒருவர் வந்திருந்தால் ஃபோட்டோ நல்ல முறையில் எடுத்திருப்போம் .
யாத்திரை சுகமாக நிறைவுபெற்றது. எல்லாம் அவன் செயல்
ஓம் நமசிவாய !
Jai Shri Ram!
No comments:
Post a Comment