Followers

Wednesday, January 9, 2019

ஸ்ரீ ராமனைப்போல் .ஸக தர்மினிக்கு விட்டுக் கொடுங்கள் : -


கோதாவரி நதி - ஸ்ரீராமபிரானுக்கும் சீதாப்பிராட்டிக்கும் நீச்சல் போட்டி. நதிக்கு நடுவில் உள்ள பாறையை யார் முதலில் தொட்டுவிட்டுக் கரைக்கு வருகிறார் என்பது தான் போட்டி.
அந்தப் பாறையின் மேலே நடுவராக அமர்ந்திருக்கிறார் ஸ்ரீலட்சுமணர்.
ராவணன் எனும் அரக்கனையே அழித்தொழிக்க அவதரித்த ஸ்ரீராமருக்கு இதெல்லாம் ஒரு போட்டியா என்ன?
கரையில் இருந்து சீதை பதினைந்து அடி தூரத்தைக் கடப்பதற்குள், அவர் பாறையைத் தொட்டுவிட்டுத் திரும்பி, பாதி தூரத்தைக் கடந்து வந்து கொண்டிருக்கிறார்.
தீவிர முகத்துடன், மூச்சிழுத்துக்கொண்டு, கைகளை வீசி, கால்களை உதைத்து அரக்கப்பரக்க நீச்சலடித்துக்கொண்டு, பாறையை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறாள் சீதை.
பரிதவிப்பான சீதையின் திருமுகத்தைப் பார்த்ததும், ஸ்ரீராமபிரானுக்குள் ஒரு யோசனை...
என் ஸகதர்மினியுடன் நான் போட்டி போட்டு வெல்வதா ? சீதை வென்றால் , அவள் மனது எவ்வளவு ஸந்தோஷிக்கும்.
இவள் என் பிரிய சகி அல்லவா? என் அன்புக்கு உரிய இல்லாள் அல்லவா? அவளைத் தோற்கடித்துவிட்டு, அந்த வெற்றியை எங்கே, எவரிடம் பகிர்ந்துகொண்டு கொண்டாடுவதாம்?
என்று நினைத்த ஸ்ரீராமர், அப்படியே தண்ணீருக்குள் மூழ்கினார்; அங்கேயே அப்படியே அமர்ந்து கொண்டார்.
அதையடுத்து, சீதாதேவி வேகமாக நீந்திக் கரையை அடைந்தாள்; வெற்றியும் பெற்றாள்.
அதுவரை நடுவராக இருந்த ஸ்ரீலட்சுமணர், வியந்து போய் 'என்ன அண்ணா! அடடா! இப்படி அநியாயமா தோற்று விட்டீர்களே ’என்று ஸ்ரீராமரைக் கேலி செய்தார்.
சீதாப் பிராட்டியாரும் எதிர்பாரா வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் ஸ்ரீராமரை வெகுவாகக் கேலி செய்தாள்.
அசோகவனத்தில் சிறை இருந்தபோது, ஸ்ரீராமரை நினைத்தபடியே கிடந்தபோது, அங்கே ஸ்ரீஅனுமன் வர... அவனிடம் இந்தச் சம்பவங்களையெல்லாம் எடுத்துச் சொல்லி, 'ஹூம்... அவரும் நானும் எப்படியெல்லாம் சந்தோஷமும் குதூகலமுமாக வாழ்ந்தோம், தெரியுமா?’என்றபடி ஏக்கப் பெருமூச்சு விட்டாளாம்!
இதைத்தான், 'பத்தினிக்குத் தோற்பான் பரம ரசிகன்’என்று சொல்லி வைத்தனர் நம் முன்னோர்.
'மனைவியைத் தோற்கடித்துவிட்டு வெற்றி பெற்ற பூரிப்பை எவரிடம் சொல்லிப் பெருமைப்பட முடியும்?
அவளிடம் தோற்றுப் போனால், அந்தத் தோல்வியைக்கூட அவளிடம் பெருமைபடப் பேசி மகிழலாம்!
இன்னும் சொல்லப் போனால், மனைவியிடம் தோற்றுப் போனால், வாழ்வில் ஜெயிக்கலாம்!
மனைவிக்கு விட்டுக்கொடுப்பதை ஸ்ரீராமபிரான் நமக்கு மிகத் தெளிவாக உணர்த்தியிருக்கிறார். இதனை உணர்ந்து, தெளிந்து, செயல்படுபவர்கள் பாக்கியவான்கள்!

No comments: