நாராயணர் சந்நிதி ஆகிய மூன்று சந்நிதிகள் கிழக்கு நோக்கி இருக்கின்றன. இங்கு இச்சங்கர நாராயண உருவம் ஏற்பட்ட விதம் பற்றி இத்தல புராணம் இரண்டு முறைகளாகக் கூறுகின்றது. கோமதியம்மை சிவனை நோக்கித் தவம் கிடந்து அவரோடு நாராயணர் உருவம் நிலைபேற்றிருக்கும் தன்மையைத் தரிசிக்க விரும்பினார்.
பெருமானும் அம்மை தவத்திற்கு அருள்வதாக கூறி ஆடிப் பவுர்ணமியில் இச்சங்கர நாராயணர் உருவத்தைக் காட்டி தரிசிக்க செய்தார். அத்துடன் தன் திருமேனியில் திருமால், பிரம்மன் முதலிய தேவர்கள் யாவரும் அடங்கியவர்களே என்பதை உலகறியச் செய்தார்.
இவ்வுண்மையை அடிப்படையாகக் கொண்டே இப்போதும் சங்கர நயினார் கோவிலில் ஆடித் தபசு நிகழ்ச்சி ஆடிப் பவுர்ணமியன்று மிகச் சிறந்த முறையில் நிகழ்ந்து வருகின்றது. வலப்பாகம் சிவன் உருவமும் இடப்பாகம் திருமால் உருவமாக இருக்கும். வலப்பக்கம் நெற்றியில் திருநீறும் இடப்பக்க நெற்றியில் திருமண் ணும் காணப்படும்.
வலபக்கம் இடுப்பில் புலித்தோலுடையும் இடப்பக்கம் இடுப்பில் பீதாம்பரமும் இருக்கும். வலப்பக்கம் செம்மேனியும், இடப்பக்கம் நீலமேனியும் தோன்றும். இவை போன்றே வலப்பக்கம் சிவனுக்குரிய அம்சங்கள் யாவும் பொருந்தியிருக்கும். இடப்பக்கம் திருமாலுக்குரிய அம்சங்களை கொண்டு இயங்குவது இததிருவுருவமாகும்.
சிவனுக்குரிய வலப்பாகத்தில் தலையில் கங்கை, பிறைச்சந்திரன், அக்னி, ஜடாமுடியும் உள்ளன. காதில் தாடங்கம், கையில் மழு, மார்பில் ருத்ராட்சம், இடுப்பில் புலித்தோல் ஆடை இருக்கிறது. திருவாசியில் நாக வடிவில் சங்கன் குடை பிடித்தபடி இருக்கிறான்.
திருமாலுக்குரிய இடப்பாகத்தில் நவமணி கிரீடம், காதில் மாணிக்க குண்டலம், மார்பில் துளசிமணி மற்றும் லட்சுமி மாலை, கையில் சங்கு, இடுப்பில் பீதாம்பரம் இருக்கிறது. இவர் பக்கமுள்ள திருவாசியில் நாக வடிவில் பதுமன் குடை பிடிக்கிறான்.
இச்சன்னதியில் காலை பூஜையில் மட்டும் துளசிதீர்த்தம் தரப்படும். மற்ற நேரங்களில் விபூதி தருகின்றனர். பூஜையின் போது சிவனுக்குரிய வில்வம், பெருமாளுக்குரிய துளசி மாலைகளை அணிவிக் கிறார்கள்.சிவன் அபிஷேகப்பிரியர். திருமால் அலங்காரப்பிரியர்.
எனவே திருமாலுக்கு உகந்த வகையில் மூலவர் சங்கரநாராயணர் எப்போதும் அலங்காரத்துடன் காட்சி தருகிறார். இவருக்கு அபிஷேகம் கிடையாது. இச்சன்னதியில் ஸ்படிக லிங்கமாக காட்சி தரும் சந்திரமவுலீஸ்வரருக்கே அபிஷேகம் செய்யப் படுகிறது. சிவராத்திரி, ஏகாதசி நாட்களில் உற்சவருக்கு அபி ஷேக, பூஜை நடக்கும்.