Followers

Sunday, December 27, 2015

ஒரு சேலை நெய்வது என்பது பல சிறுசிறு வேலைகளை கொண்ட பெரிய வேலையாகும்

ஒரு காலத்தில் நெசவு நெய்வது சௌராஷ்டிரா மக்களில் பெரும்பாலானோரின் குடும்பத்தொழிலாக இருந்தது. நாங்கள் குடியிருந்த தெருவில் காலை முதல் மாலை வரை இந்த தறிகளின் 'டக் டிக் டக் டிக்' சத்தம் கேட்காத வீடுகள் மிகவும் குறைவே. ஒவ்வொரு டக் டிக்கும் ஒரு தாள நயத்துடன் பட்டு நூலை குறுக்காக எடுத்துச் செல்லும் களியுடன் ஆடும் ஆட்டத்தில் பிறப்பதே அழகான சேலை. தறி நெய்பவரின் கைகள் இழுக்கும் கயிறு டக் என்றால் கால் கீழிருக்கும் கட்டையை அழுத்த, களி வடமிருந்து இடமாவோ, இடமிருந்து வடமாவோ ஒரு இழையை நெய்யும் அழகே அழகு.
வேடிக்கையாக இருக்கிறதே என்று நானும் பல முறை பக்கத்து வீடுகளில் தறி மேல் ஏறி கலாட்டா செய்திருக்கிறேன். ஆனால் அந்த வேகம், கை கால்களின் கோ-ஆர்டினேஷன் இல்லாததால் என்னால் ஒரு முறை கூட சரியாக செய்ய முடிந்ததில்லை.
பார்ப்பதற்கு எளிதாக இருக்கும் இந்த வேலை எவ்வளவு கடினம் என்பது செய்பவர்களுக்குத் தெரியும். ஒரு சேலை நெய்வது என்பது பல சிறுசிறு வேலைகளை கொண்ட பெரிய வேலையாகும். பட்டு நூலை வாங்கி அதை சிக்கில்லாமல் பிரித்து, பல வண்ண பட்டு நூல்களை டிசைன்களுக்கு ஏற்றவாறு சேர்த்து, தெருவில் பாவு பிரிப்பது என்று செய்து பிறகு தறியில் ஏற்றுவார்கள். அது ஒரு சேலையாக வெளிவரும் பொழுது அவர்கள் முகத்தில் பிறந்த குழந்தையை கையில் ஏந்தும் மகிழ்ச்சி ததும்பும். விசேஷ தினங்கள் நெருங்குகையில் ஓயாத தறி சத்தம் சொல்லாமல் சொல்லும் ஆர்டர்கள் முடிக்க வேண்டிய நேரமென்று!
தறி இருக்கும் வீடுகளில் குனிந்தே வளைய வருவார்கள். அதிக உடல் உழைப்பும், குறைந்த வருமானமும் கொண்ட இத்தொழில் இயந்திரமாக்கலுக்குப் பிறகு நலிந்து விட்டாலும் இன்றும் சில வீடுகளில் கைத்தறி நெசவுத் தொழில் தொடர்ந்து கொண்டு இருக்கிறது பல நெசவாளர்களின் குழந்தைகளும் படித்து நல்ல வேலைக்குச் செல்ல ஆரம்பிக்க, தறிகள் இருந்த இடம் மட்டுமே அவர்களின் வீடுகளில் நினைவுகளாக!

No comments: