ஒராண்டுக்கு முன் எடுக்கப்பட்ட பண மதிப்பிழப்பு நடவடிக்கை இந்திய பொருளாதார வரலாற்றில் இதுவரை இல்லாத இமாலய நடவடிக்கை, இந்த மூலம் அடுத்த தலைமுறைக்கு நேர்மையான, நியாயமான வாழ்க்கை முறை கிடைக்கும் என மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி கூறினார்.
பிரதமர் நரேந்திர மோடி, கடந்த ஆண்டு, நவம்பர் மாதம், பழைய 500 - 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தார். கறுப்புப் பணத்தை ஒழிப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக மத்திய அரசு அறிவித்தது. கள்ளப் பணம் மற்றும் தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கை எனவும் மத்திய அரசு வர்ணித்தது..
பண மதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட நவம்பர் 8-ம் தேதியான நாளை ஒராண்டு ஆகும் நிலையில், அன்று கறுப்புப் பண ஒழிப்பு தினமாக கடைபிடிக்கப் போவதாக மத்திய அரசு கூறியுள்ளது.
இந்நிலையில் பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் ஒராண்டையொட்டி மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி கூறியதாவது:
''ஒராண்டுக்கு முன் எடுக்கப்பட்ட பண மதிப்பிழப்பு நடவடிக்கை இந்திய பொருளாதார வரலாற்றில் இதுவரை இல்லாத இமாலய நடவடிக்கை. கறுப்புப் பணத்தை ஒழிப்பது, அதிகமானோரை வரி வளையத்திற்குள் கொண்டு வருவது, ரொக்கப் பணத்திற்கு பதிலாக ரொக்கமில்லா பண பரிவர்த்தனையை ஊக்குவிப்பது உள்ளிட்ட நோக்கங்களுடன் பண மதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இதன் மூலம் நாட்டின் பொருளாதாரம் மற்றும் வரி செலுத்தும் முறை நேர்மையானதாகவும், வெளிப்படை தன்மையுடனும் மாறும்.
பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் பயனை பற்றி பலரும் கேள்வி எழுப்புகின்றனர். ஆனால், அடுத்த தலைமுறை இதை நன்கு உணர்ந்து கொள்ளும். நேர்மையான, நியாயமான வாழ்க்கை முறை கிடைக்கும். பொருளாதார வளர்ச்சியின் சிறப்புகளை உணர்ந்து அவர்கள் பெருமை கொள்வர்.
பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பின், ரொக்கப் பணத்தின் புழக்கம் 3.89 லட்சம் கோடியாக குறைந்துள்ளது. ரொக்கப் பணப் புழக்கம் குறைவதன் மூலம் கறுப்புப் பணப் புழக்கம் குறைந்துள்ளது.
15.28 லட்சம் கோடி ரூபாய் திரும்பி வந்துள்ள நிலையில், சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 1.6 லட்சம் கோடி ரூபாயில் இருந்து 1.7 லட்சம் கோடி ரூபாய் வரை சட்டவிரோதமாக பண பரிமாற்றம் செய்யப்பட்டது குறித்து சிபிஐ உட்பட அரசின் பல கண்காணிப்பு அமைப்புகளும் விசாரணை நடத்தி வருகின்றன. கணக்கில் காட்டப்படாத 29,213 கோடி ரூபாய் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் 56 லட்சம் தனிநபர்கள் புதிதாக வரி வளையத்திற்குள் வந்துள்ளனர். இதன் மூலம் வரி செலுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்து இருப்பதுடன் வரி வருவாயும் உயர்ந்துள்ளது. கார்ப்பரேட் நிறுவனங்கள் அல்லாமல் தனிநபர்களின் வருமான வரி அளவு 42 சதவீதம் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் போது, 2.97 லட்சம் போலி நிறுவனங்கள் செயல்படுவது கண்டு பிடிக்கப்பட்டு அவற்றின் மீது நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது. அவற்றில் 2.24 லட்சம் போலி நிறுவனங்களின் பதிவு ரத்து செய்யப்பட்டுள்ளது. அவர்கள் மீதான நடவடிக்கையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் ரொக்கமில்லா பணப் பரிவர்த்தனை அதிகரித்துள்ளது. டெபிட் கார்டு உள்ளிட்டவற்றின் மூலம் 3.3 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள 10 கோடி பணப் பரிவர்த்தனைகள் நடந்துள்ளன. இதுமட்டுமின்றி ஏழை, எளிய, கிராமப்புற மக்களும் தற்போது வங்க சேவையை பயன்படுத்துவது அதிகரித்துள்ளது.' கமலின் பயண விளைவு எப்படி? '
இவ்வாறு அருண் ஜேட்லி கூறினார்.
No comments:
Post a Comment