Followers

Wednesday, November 21, 2018

திருவொற்றியூர் கோயில் ஆதிபுரீஸ்வரை நாளை முதல் மூன்று நாட்கள் கவசம் இல்லாமல் தரிசிக்கலாம்!


பிரளயத்திற்குப் பின் தோன்றிய முதல் சுயம்பு சிவலிங்கம் ஆனதால் இத்தல இறைவன் ஆதிபுரீஸ்வரர் என்றும், வாசுகி என்ற பாம்பிற்கு அருள்புரிய புற்று வடிவில் எழுந்தருளி தன்னுள் அடக்கிக் கொண்டதால் படம்பக்கநாதர் என்றும் அழைக்கப்படுகிறார்.
புற்று மண்ணால் ஆன இந்த லிங்கத் திருமேனி வருடத்தில் 3 நாட்களைத் தவிர மற்ற நாட்களில் லிங்கம் பெட்டி போன்ற அமைப்பில் கவசம் சார்த்தப்பட்டு மூடியே இருக்கும். ஒவ்வொரு வருடமும் கார்த்திகை மாத பெளர்ணமி நாளில் கவசம் திறக்கப்படும். பெளர்ணமியன்று மாலையில் இறைவனுக்கு புனுகு மற்றும் சாம்பிராணி தைலத்தால் அபிஷேகம் செய்கிறார்கள்.
தொடர்ந்து 3 நாட்களுக்கு இறைவனுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்படும். மூன்றாம் நாள் இரவில் மீண்டும் சுவாமிக்கு கவசம் சாத்தி விடுவர். இந்த நவம்பர் 22, 23, 24 ஆகிய நாட்களில் இறைவனை புற்று வடிவமாகக் கண்டு தரிசிக்க ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். இறைவன் இங்கு தீண்டா திருமேனியனாகக் காட்சி தருவதால், இவருக்கு அபிஷேகம் செய்யப்படுவதில்லை. ஆவுடையாருக்கு மட்டும் அபிஷேகம் செய்கின்றனர்.
இத்திருத்தலம் சென்னை மாநகரின் வடக்குப் பகுதியில் சென்னை செண்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து சுமார் 8 கி.மி. தொலைவில் அமைந்துள்ளது. சென்னை நகரின் எல்லாப் பகுதிகளில் இருந்தும் நகரப் பேருந்துகள் திருவொற்றியூருக்கு செல்கின்றன. புறநகர் ரயில் நிலையமும் திருவொற்றியூரில் இருக்கிறது.
இவ்வாலயம் வெள்ளிக்கிழமைகளில் காலை 5 மணி முதல் இரவு 10 மணி வரையிலும், பெளர்ணமி நாட்களில் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரையிலும், மற்ற நாட்களில் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8-30 மணி வரையிலும் திறந்திருக்கும்.
திருச்சிற்றம்பலம்

No comments: