Followers

Wednesday, November 7, 2018

தெய்வத்தைக் குறை சொன்ன பக்தருக்கு மகாபெரியவா கருணையுடன் சொன்ன உபதேசம்

"உண்மையிலேயே தெய்வம்னு ஒண்ணு இருக்கா? அப்படி இருந்தா எனக்கு மட்டும் ஏன் இப்படியெல்லாம் நடக்குது?"
நன்றி-குமுதம் லைஃப்-(இந்த வாரம்)
தொகுப்பு-என். அக்‌ஷிதா
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.
உண்மையிலேயே தெய்வம்னு ஒண்ணு இருக்கா? அப்படி இருந்தா எனக்கு மட்டும் ஏன் இப்படியெல்லாம் நடக்குது?
இப்படி தெய்வத்தைக் குறை சொன்ன பக்தர் ஒருவருக்கு காஞ்சி மகாபெரியவா கருணையுடன் சொன்ன உபதேசம்தான் இந்த சம்பவம்.
ஒரு சமயம் மகாபெரியவாளை ஸ்ரீமடத்திற்கு வந்திருந்த கூட்டத்தில் சுமார் ஐம்பது வயது மதிக்கத்தக்க ஒருவரும் இருந்தார்.அந்த நபர் முதல்முறையாக அப்போதுதான் தரிசிக்க வந்திருந்தார்.
வரிசையில் நின்ற அவர் தன் முறை வந்ததும் பெரியவாளுக்கு நமஸ்காரம் செய்தார். எல்லாம் ஏதோ உடனே என்று செய்வது போல்தான் இருந்தது.
நமஸ்காரம் செய்துவிட்டு பிரசாதத்துக்காக கைநீட்டியபடி நின்ற அவரைப் பார்த்தார் மகாபெரியவா. சில விநாடிகளுக்குப் பிறகு அவரைப் பார்த்து, "என்ன சுவாமியையெல்லாம் திட்டறதுல இருந்து,ஒரு வழியா ஓய்ஞ்சிட்ட போலருக்கு.திட்டியும் பிரயோஜனம் இல்லைன்னு தோணிடுத்து. அதனால தினமும் செய்துண்டு இருந்த பூஜையைக் கூட நிறுத்திட்டே இல்லையா?" என்று கேட்டார்.
வந்தவருக்கு அதிர்ச்சி.'நாம் எதுவுமே சொல்லவில்லை. இவரை தரிசிப்பதே இதுதான் முதல் முறை.ஆனால், நாம் இதுநாள்வரை செய்த எல்லாவற்றையும் ,பக்கத்தில் இருந்து பார்த்தவர் மாதிரி பரமாச்சார்யா சொல்கிறாரே!' என்று ஆச்சரியம்
சில விநாடிகள் அப்படியே திகைத்து நின்றவர், உடைந்துபோன குரலில் மெதுவாக பேசத் தொடங்கினார்.
"பெரியவா! சமீபகாலமா குடும்பத்தை ஒவ்வொருநாளும் நடத்துவதே ரொம்ப கஷ்டமான ஜீவனமாயிடுச்சு.பொறுப்பாக உழைக்கத் தயாராக இருக்கிறேன். ஆனாலும் சரியாக வேலையும் கிடைக்கிறதில்லை .தூங்கி எழுந்ததில் இருந்து தூங்கப் போகிற வரைக்கும், பலதடவை மனசாலும், செயலாலும் சுவாமி கும்பிடாத நாளே கிடையாது. ஆனா ஒரு பிரயோஜனமும் இல்லை.கஷ்டப்படுவதைப் பார்த்துக் கொண்டிருக்கிறாயே, நீ என்ன கல்லா?
மரமா?மட்டையா? என்றெல்லாம் திட்டியும் பார்த்துவிட்டேன்..மத்தவங்க ஒரு தரம் கேட்டாலே ஓடோடி வந்து அருள்புரியும் சாமிக்கு, எங்க சத்தம் மட்டும் பகவான் காதிலே கேட்கவில்லை போலிருக்கிறது. அதான் எல்லாத்தையும் நிறுத்திட்டேன்!" கண் ஓரத்துல நீர் தளும்ப தழுதழுத்தார் அவர்.
பரிவோடு அவரைப் பார்த்தார் மகான்
"ஓரு விஷயம் கேட்கிறேன்.கரெக்டாக யோசிச்சு பதில் சொல்லு ஒரு ஆஸ்பத்திரிக்கு தினமும் எத்தனையோ நோயாளிகள் வருவார்கள்.சிலர் தலைவலி என்று வருவர்.சிலருக்கு காய்ச்சல் வந்திருக்கும். சிலருக்கு வயிற்றுவலி இருக்கலாம். இப்படிப்பட்டவர்கள் அங்கே இருக்கும்போது, நச்சுப்பாம்பு கடித்துவிட்டது என்று ஒருவரைத் தூக்கிண்டு வருகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். இந்த மாதிரியான சந்தர்ப்பத்தில் டாக்டர்கள் என்ன செய்வார்கள்? யாருக்கு உடனடியாக சிகிச்சை பண்ணாவிட்டால் அப்புறம் அது பிரயோஜனப்படாதோ அவருக்கு சிகிச்சைதரப் போய்விடுவார்கள்.
அதுக்காக சாதரணக் காய்ச்சல்,தலைவலி என்று வந்தவர்களைஅலட்சியப்படுத்துவதாக அர்த்தம் இல்லை. அவர்களுக்கு கொஞ்சம் தாமதமாக சிகிச்சை தந்துக்கலாம். சாதாரண நோயாளிக்கு சிகிச்சை பண்ற டாக்டர்களுக்கே யாருக்கு எப்போ உதவ வேண்டும்கிறது தெரிகிறது என்றால், சாட்சாத் பகவானுக்கு,தன் பக்தர்கள்ல, யாரோட வேண்டுதலுக்கு உடனே
பலன் தரவேண்டும்.யாருடைய பிரச்னையை உடனடியாக தீர்க்க வேண்டும் என்று தெரியாதா? உனக்கு சுவாமியோட கடாட்சம் கிடைக்க தாமதமாகிறது என்றால் உன்னைவிட அதிகமாக அவஸ்தைப்படுகிற யாருக்கோ உதவுவதற்காக சுவாமி ஓடியிருக்கார் என்று அர்த்தம்.அந்த வேலை முடிந்ததும் அவசியம் உனக்கும் அனுக்கிரகம் பண்ணுவார்.அதற்குள் தெய்வத்தை நிந்திக்கிறதும்,பூஜை புனஸ்காரங்களை நிறுத்திவிட்டு நாத்திகம் பேசுவதும் தப்பில்லையா?"
பெரியவா சொல்லச் சொல்ல அந்த நபரின் மனதில் தெய்வத்தைப்பற்றி இருந்த தவறான எண்ணங்கள் கரைந்து ஓட ..அதற்கு அடையாளமாக அவரது கண்களில் இருந்து தாரை தாரையாக வடிந்து ஓடியது கண்ணீர்.
பகவானின் கருணையைப் பற்றி பரமாசார்யா சொன்ன பாடம் அந்த பக்தருக்கு மட்டுமல்ல. நம் எல்லோருக்குமே தான். என்பதை உணர்ந்து கொண்ட பக்தர்கள் உரத்த குரலில் கோஷம் எழுப்பினார்கள்.ஜயஜய சங்கர....ஹரஹர சங்கர..!

No comments: