Followers

Saturday, November 24, 2018

மஹாபெரியவா திருவடிகள் சரணம்


“கனகதாரா” சோஸ்திரத்தால் பெய்தது தங்க மழை -அன்று
மஹாபெரியவாளின் கருணையால் பெய்த மழையே தங்கமானது- இன்று”
வசந்தநல்லூர்
என்னும் சிறு கிராமத்தில் ஓர் இரவில் நடந்த அதிசயம்
வாருங்கள் நானும் உங்களுடன் சேர்ந்து வசந்தநல்லூருக்கு வருகிறேன்
. நாமெல்லாம் கோவிலுக்குச்சென்று அடிப்ப்ரதக்ஷிணம் செய்வோம் நம் வீட்டு நலனுக்கு. ஆனால் மஹாபெரியவா இந்தியாவையே அடிப்ரதக்ஷிணம் செய்தார் நாட்டு நலனுக்கு.
அப்படிப்பட்ட மஹானின் ஓர் அற்புதச்செயல். மஹாபெரியவாளின் நடைப்பயணம் நாம் எல்லாம் அறிந்த ஒன்று.
ஒரு நாள் மஹாபெரியவா தன் கைங்கர்ய சிரோன்மணிகளுடன் திருக்கோவிலூர் என்ற ஊருக்கு நடைப்பயணம் செய்ய ஆரம்பித்தார். .பெரியவாளின் வருகையை எதிர்பார்த்து, ஊர் மக்கள் மற்றும் பக்தர்கள் அனைவரும் திருக்கோவிலூர் ஊர் எல்லையில் காத்துக்கொண்டு இருந்தனர்.
எதிர்பாராத திருப்பம்:
திருக்கோவிலூருக்கு சற்று முன்பாக வலதுகை பக்கம் ஒற்றையடிப்பாதை ஒன்று சென்றது. விசாரித்ததில் அந்தப்பாதை, வசந்தநல்லூர் என்னும் சிறிய கிராமத்திற்குச்செல்கிறது என தெரிய வந்தது.
மஹாபெரியவளின் ஸ்ரீகார்ய புருஷர்கள் சொன்னது:
“பெரியவா, அந்த ஊர் மிகச்சின்ன கிராமம். அந்த ஊர்ல தீர்த்தம் கிடையாது..ஊர் மக்கள் அவ்வளவு சுத்தமா இருக்கமாட்டா. ஏற்கனவே மிகவும் நாழியாய்டுத்து. திருக்கோவிலூரில் பக்தர்கள் தெருவுல காத்திண்டிருப்பா!. நாம நேரா திருக்கோவிலூர் போயிடலாம் பெரியவா “என யோசனை சொன்னார்கள்.
அவர்களுக்கு தெரியாதா என்ன. பெரியவா ஒரு முடிவு எடுத்துவிட்டால் அந்த ஈஸ்வரனே வந்தாலும் மாத்த முடியாது. ஏன்னா அந்த ஈஸ்வரனே பெரியவதானே. சரி என்று எல்லோரும் அந்த ஒத்தையடி பாதையில் பெரியவாளை அழைத்துக்கொண்டு செல்லத்தொடங்கினர்.
அந்த ஒத்தயடிப்பாதை மிகவும் வறண்டு போயிருந்தது. சிறிது நேரத்தில் அந்த ஊருக்குள் நுழைந்தனர் .. அப்பொழுது தான் தெரிந்தது அந்த ஊர் மண் மட்டும் வறண்டிருக்கவில்லை மக்களின் தலையும், மனசும், மனசில் இருந்த நம்பிக்கையும் வறண்டிருந்தன..
அப்பொழுது பெரியவா கண்களில் பட்டது .அந்தக்கண்கொள்ளாக்காட்சி.
ஆமாம்
வேப்ப மரம், ஆல மரம், அரச மரம், வில்வ மரம்
என எல்லா மரங்களும்
ஒன்றை ஒன்று பின்னிப்பிணைத்திருந்தன.அந்தக்காட்சி நமக்கு உணர்த்திய உண்மை
"நாங்கள் இயற்கையோடு ஒன்றியும்
தாவரங்களின் நட்போடும் இயைந்து
வாழ்ந்து கொண்டு வருகிறோம்.”
இதை எழுதும்போது என் மனதில் பட்டது
தாவரங்கள் போல் நம் மனித இனமும் ஒற்றுமையுடன் வாழந்தால் நம்மை படைத்த இறைவன் எவ்வளவு மகிழுந்து போவான். பிறப்புக்கும் இறப்புக்கும் இடையில் நடக்கும் போர் ஒரு குருஷேத்திர யுத்தம். சாதனைகள் என்ற பெயரில் அரங்கேறும் வேதனைகள் தான் எத்தனை எத்தனை..இருப்பவன் இல்லல்லாதவனிடம் ஏச்சு பிழைப்பது
அன்னியோன்னியம் அற்றுப்போன ஆத்ம உறவுகள்,
எதிர்பார்ப்புகளின் மறு பெயர் தான் உறவுகளா?
சூரிய உதயத்திற்கும் சூரிய அஸ்தமனசத்திற்கும் இருக்கும் இந்த இடைப்பொழுதில் நடக்கும் வாழ்க்கை என்ற நாடகத்தில் நாமே பாத்திரமாகவும் பார்வையாளர்கவும் நடிக்கிறோம் பார்க்கிறோம். பெரியவா அற்புதத்தின் நடுவில் நம் வாழ்க்கையைப்பற்றியும் நாம் சற்று சிந்திப்போம்..
நாம் அந்த அற்புத அதிசயத்திற்குள் நுழைவோம்.
மஹாபெரியவா வேதபுரி மாமாவை அழைத்து அந்தப்பின்னிப்பிணைந்து வாழ்ந்துகொண்டிருந்த மரங்களுக்கடியில் ஒரு ஓலைக்கொட்டாய் போடச்சொன்னார்கள். கொட்டாயும் போட்டாகிவிட்டது. பெரியவாளும் உட்கார்ந்தாகிவிட்டது. கைங்கர்ய சிரோன்மணிகளை அழைத்து, ஊருக்குள் இருக்கும் பெரியமனிதர்களை அழைத்துவரும்படி கட்டளையிட்டார்.
ஊருக்குள் இருந்த பெரிய மனிதர்களும் பெரியவாளை வந்து வணங்கினார்கள். அந்த ஊர்ப்பெரியவர்களுக்கு பெரிவாளை ஓர் மகான் என்ற அளவில் தான் தெரியும். பெரிவாளும் பெரியமனிதர்களும் பேசிக்கொண்டதை ஒரு சம்பாஷணை வடிவில் தருகிறேன். மிகவும் சுவாரசியமாக இருப்பதற்காக..
பெரியமனிதர்கள்:-: வணக்கங்களும் உபசரிப்புகளும் முடிந்த பின் ஊர்ப்பெரியவர்கள் பெரியவாளை வணங்குகிறார்கள்.
பெரியவா : நான் உங்க ஊர்ல தங்கி பூஜை செய்யலான்னு இருக்கேன். உங்களக்கு எந்த ஆட்சேபணையும் இல்லையே.?
பெரியமனிதர்கள்: எங்களுக்கு எந்த ஆட்சேபணையும் இல்லைங்க சாமி. .இந்த ஊருல மழை பெஞ்சு பல வருஷம் ஆச்சுங்க... சாமி கிட்ட வாய் தவறி தப்பா பேசிடக்கூடாது. கழுவிக்க தண்ணி இல்லீங்க சாமி.
பெரியவா:: இன்னிக்கி ஒரு ராத்திரி தங்கிப்பார்க்கலாம்
என்ன அபார நம்பிக்கை
இருக்காதா பின்னே
இந்த பிரபஞ்சத்தையே தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும்
ஒரு அவதார புருஷர் அல்லவா நம் மஹாபெரியவா
********
பெரியமனிதர்கள் : ஒரு ராத்திரியில் என்ன அற்புதம் நடந்து விடப்போகிறது சாமி. எந்த பாவி இந்த ஊருல இருக்கான்னு தெரியல. அஞ்சு வருஷமா சொட்டு மழை இல்லை சாமி.
பெரியவா: சரி இன்னிக்கி ஒரு ராத்திரி பார்க்கலாம்.நீங்கல்லாம் போய்ட்டு காத்தால வாங்கோ. ஊர் மக்கள் கலைந்து சென்றனர். பெரியவா அந்த ஓலை பந்தலுக்கு அடியில் உட்கார்ந்து கொண்டு எல்லா திசையிலும் ஒரு பார்வை பார்த்தார். அப்போது மாலை மணி சுமார் ஏழு இருக்கும். பகலும் இரவும் சந்திக்கும் நேரம். பெரியவா வேதபுரி மாமாவை கூப்பிட்டு சில கட்டளைகளை பிறப்பித்தார்.
பெரியவா: ஏன்டா வேதா, வானம் எப்படி இருக்கு பாரு.
வேதபுரி மாமா: (வானை பார்த்துவிட்டு)) பெரியவா வானம் அலம்பி விட்ட மாதிரி இருக்கு. துண்டு மேகம் இல்ளல பெரியவா.
ஒரு அரைமணி கழித்து மறுபடியும் வேதபுரி மாமாவை அழைத்து மறுபடியும் வானத்தை பாரு என்றார்.வேதபுரி மாமாவும் வானத்தை பார்த்துவிட்டுச்சொன்னார்
வேதபுரி மாமா: பெரியவா! வானம் அலம்பி விட்ட மாதிரி இருக்கு. பிறை நிலா நன்னா தெரியறது பெரியவா.
ராத்திரி பத்து மணிக்கு மறுபடியும் வேதபுரி மாமாவை கூப்பிட்டு " வேதா, ஜில்லுனு காத்து வருது இல்ல.
வேதபுரி மாமா: ஆமா பெரியவா ஜில்லுனு காத்து வருது.
பெரியவா: மழை வர்ற மாதிரி தெரியலை?.
வேதபுரி மாமா:: ஆமாம் பெரியவா மழை வரும் போல இருக்கு.
ஏழு மணி நேரம் தொடர் மழை
சரியா இரவு 11 மணிக்கு பிடித்த மழை மறு நாள் காலை 6 மணி வரை தொடர்ந்து பெய்தது. ஊர் முழுக்க முழங்கால் அளவு தண்ணி..சூரிய உதயத்திற்கு முன் வரும் அருணோதயமும் வந்துவிட்டது.
ஊர் மக்கள் எல்லாரும் கைகளை தலைக்கு மேல கைகளை கூப்பிக்கொண்டு “சாமி எங்களை வாழ வைக்க வந்த தெய்வம நீங்க. இந்த ஊரிலேயே இருங்க சாமி. நாங்க உங்களுக்கு என்ன வேணாலும் பண்றோம்.
பெரியவா: நீங்க எல்லாம் நன்னா இருங்கோ. நான் இன்னும் நிறைய ஊர் மனுஷாளை பார்க்கணும்.நான் கிளம்பறேன்.
ஊர் மக்கள் சொன்ன வார்த்தை
" பெஞ்ச ஒவ்வொரு மழை துளியும் எங்களுக்கு தங்கமாகும் சாமி.
இப்போது புரிகிறதா! அன்று தங்க மழை பெய்தது
இன்று பெய்த மழையே தங்கமானது
பல வருஷத்துக்கு பெய்யாமல் இருந்த மழை, மஹாபெரியவளின் காலடி பட்டவுடன் ஊடலில் இருந்த மண்ணும விண்ணும் ஊடல் மறைந்து காதலில் திளைத்தது. விளைவு விண்ணும் மண்ணும் சேரந்து ஆனந்தக்கண்ணீர் வடித்ததன. ஊர் முழுவதும் மழை நீர் மற்றும் ஊர் மக்களின் அனந்தக்கண்ணீரும் சேர்ந்து ஊர் முழுவதும் முழங்கால் அளவு தண்ணீர்.
மஹாபெரியவாளின் காலடி பட்டவுடன் ஓர் ஊரே உயிர் பெற்றது.
அந்த பரமேஸ்வரன் அவதாரம் நம் பெரியவா என்பது
எல்லாருக்கும் தெரிந்த ஒன்று.
இதற்கு மேல் என்ன வேண்டும் சான்று.
சொல்லக்கேள்வி : இன்று வரை வசந்தநல்லூரில் பஞ்சம் இல்லை.
ஊர் மக்களின் மனசு விசாலமானது
மண் மகத்துவமானது
விளைந்த நெல் மணியும் பெரிசா விளைஞ்சது .
ஓர் இரவில் நடந்த அதிசயம்
ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர

No comments: