திடீரென படுக்கையிலிருந்து எழுந்து கொண்டார் ரமணர். தன் கோலை ஊன்றிச் சற்று வேகமாக வெளியே சென்றார். 'இயற்கை உபாதைக்காக பகவான் செல்கிறார் போலும்' என நினைத்த அணுக்கத் தொண்டரும் பகவானைப் பின் தொடர்ந்தார்.
ஒரு புதருக்குப் பின்னால் சென்று மறைந்தார் பகவான்.
தொண்டரும் காத்திருந்தார். பகவான் வரவில்லை. அரை மணி ஆகியும் பகவான் திரும்பி வராததால் கவலையுற்ற தொண்டர் பகவானைத் தேடிச் சென்றார்.
புதரை விலக்கிக் கொண்டு சற்று தூரம் சென்றவர் அங்கே தெரிந்த காட்சியைக் கண்டு அப்படியே திகைத்து நின்று விட்டார்.
பகவான் குத்துக்காலிட்டு அமர்ந்திருக்க, உடல் முழுதும் சொறி பிடித்த, பார்க்கவே அருவருப்பான தோற்றம் கொண்ட நாய் ஒன்று பகவானின் காலை நக்கிக்கொண்டு இருந்தது. தன் வாலைக் குழைத்து, பின் வேகவேகமாக அதனை ஆட்டியவாறு செல்ல முணங்கல்களுடன் பகவானின் காலை, கையை, முகத்தை அது நக்கிக் கொண்டிருந்தது.
பகவானும், “போதுமா.. போதுமாடா... இன்னும் வேணுமா” என்று கனிவோடு சொல்லியவாறே அதன் அருகில் அமர்ந்து அன்போடு அதனைத் தடவிக் கொடுத்துக் கொண்டிருந்தார்.
தொண்டர் ஒன்றும் புரியாமல் திகைத்தவாறே அதைப் பார்த்துக் கொண்டிருந்தார்.
சற்று நேரம் சென்றதும், “சரிடா, இப்போ திருப்தி தானே ஒனக்கு” என்று சொல்லிவிட்டு எழுந்து கொண்டார்.
நாயும் அவரது கால்களை நக்கி விட்டு இருளுக்குள் ஓடி மறைந்தது. பகவானும் அப்படியே போய் படுத்துக் கொண்டு விட்டார்.
மறுநாள் காலை தொண்டர் எழுந்து வெளியே சென்றபோது ஆச்ரமத்தின் பின்னால் அந்த நாய் இறந்து கிடந்தது.
ரமணர் ஓய்வாக அமர்ந்திருந்த நேரத்தில், தொண்டர், நாய் இறந்து கிடந்ததைப் பற்றிச் சொன்னார்.
உடனே பகவான், “ஆமாம். பாவம் அவன். சாகறதுக்கு முன்னால எப்படியாவது என்னைப் பாக்கணும்னு தவிச்சான். முடியலை. நீங்க யாரும் ஆச்ரமத்துக்குள்ளே அவனை விடலே. சொறி நாய்னு சொல்லித் துரத்திட்டேள். மத்த நாய்களும் அவனை இந்தப் பக்கம் வரவிடலை. அதான் ராத்திரி ஆனப்புறம் அவனைப் பாக்கறதுக்காகப் போனேன். என்னைப் பார்த்தே ஆகணும்ங்கற அவனோட சங்கல்பம்தான் என்னை அங்க போக வச்சுது. அவனும் பார்த்துட்டு நிம்மதியாப் பிராணனை விட்டான்.” என்றார். “நாம நினைக்குறோம், அது நாய்னு. அந்த உடம்புல எந்த உயர்ந்த ஆத்மா இருக்கோ? எந்தக் கர்மாவைத் தீர்த்துக்கறதுக்காக அந்த சரீரத்துல்ல இருக்கோ. அதெல்லாம் யாருக்குத் தெரியும்?” என்றார், ஒன்றுமே தெரியாதவர் போல.
நாய்க்கும் அருள் புரிந்த பகவானின் பெருங்கருணைப் பேராண்மையை வியந்து தொழுது நின்றார் தொண்டர்.
நாய்க்கு அருள் புரிந்தவர் நமக்கருள் புரிய மாட்டாரா என்ன!
நமச்சிவாய
No comments:
Post a Comment