Followers

Monday, August 3, 2020

ஜி. டி. நாயுடு பற்றி பலருக்கு தெரியாத விஷயங்கள் என்ன?

ஜி. டி. நாயுடு பற்றி பலருக்கு தெரியாத விஷயங்கள் என்ன? 
ஜிடி. நாயுடு இயந்திரங்கள், மின் சாதனங்கள், விவசாயம் என்று பல துறைகளில் கண்டுபிடிப்புகளை தந்தவர். விஞ்ஞானி, தொழிலதிபர், புகைப்படக்காரர் என்று பல முகங்களை கொண்டவர். அந்நியன் படத்தில் கடைசி காட்சியில் நியூஸ் ரீல் முடிந்ததும் வரும் வசனத்தில் ஒரு வரி.. இது வெறும் நியூஸ் ரீல் இல்ல.. இந்தியா தவறவிட்ட தருணங்களின் தொகுப்பு… (வசனம் - சுஜாதா..) அப்படி நம் நாடு தவறவிட்ட தொகுப்பு தான் ஜி.டி நாயுடு. சமீபத்தில் வினோத் ஜான் என்பவர் எழுதிய "ஜி.டி. நாயுடு - இந்தியாவின் எடிசன்" எனும் புத்தகம் படித்ததில். அதில் பல நிகழ்வுகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் ஒன்று அவரது பேட்டரியில் இயங்கும் "ரேசன்ட் பிளேடு" எனும் பெயரில் வந்த ஷேவிங் ரேசர் பிளேடுகள்.  அந்தப் பிளேடுக்கு உலக சந்தையில் பிரம்மாண்ட வரவேற்பு கிடைத்தது. ஒரு பிளேடை வைத்து ஒரு முறை அல்லது இரண்டு முறைதான் சவரம் செய்யலாம். ஆனால் இந்த ஒரு பிளேடால் 200 முறை செய்தாலும் அதன் முனை மழுங்காது என்றால் அது சாதனைதான். மேலும் இதுவரை உலக அரங்கில் விற்பனைக்கு வந்த மிக உயர்ரக பிளேடுகளை விட, திரு. ஜி.டி. நாயுடு கண்டுபிடித்த பிளேடுதான் உலகிலேயே மிகவும் இலேசானது. அதாவது, ஓர் அங்குலத்தில் ஒன்றின் கீழ் இருநூறு பாகம் குறுக்கு அளவு உடையதாகும். அந்த பிளேடைக் கையிலெடுத்து, அதன் இரு முனைகளையும் வளைத்து இரு ஓரங்களில் கொண்டு வந்து பார்த்தாலும் அந்த பிளேடு ஒடியாது. மின்சாரத்தில் இயங்க கூடிய ரேசரில் பயன்படுத்தப்படும் இந்த பிளேடு உலகின் பல பொருட்காட்சிளில் கலந்து கொண்டு பரிசைப்பெற்றுள்ளது.  இந்தப் பிளேடு கண்டுபிடிக்கப்பட்டதே ஒரு சுவாரஸ்யமான கதை தான். 1932-ஆம் ஆண்டின்போது ஜி.டி. நாயுடு தன் முதல் உலகச் சுற்றுப் பயணம் செய்த நேரத்தில், முக சவரம் செய்துக் கொள்ள இலண்டன் நகரிலுள்ள ஒரு முடிவெட்டும் கடைக்குச் சென்று ஷேவிங் செய்து கொண்டார். முகம் சவரம் செய்த பின்பு எவ்வளவு கூலி என்று ஜி.டி.நாயுடு கடைக்காரனைக் கேட்டபோது, அவன் ஒரு ஷில்லிங் என்றான். அதன் மதிப்பு அன்றய நமது நாட்டு நாணயத்திற்கு 75 புதுக் காசுக்குச் சமம். முக சவரத்துக்கு அன்றைய காலத்தில் இது அதிகப்படியான கூலி தான் என்பதை உணர்ந்த ஜி.டி.நாயுடு, கடைக்காரருக்கு காசைக் கொடுத்து விட்டு வெளிவந்த அன்றே - ஒரு முடிவான எண்ணத்துக்கு வந்தார். இனிமேல் முக சவரம் செய்ய கடைக்குப் போகக் கூடாது. ஒன்று முகத்தை நாமே சவரம் செய்து கொள்ள வேண்டும். இல்லை யானால் தாடியை வளர்த்துக் கொள்ள வேண்டும் - என்பதுதான் அந்த முடிவு. தாடி வளர்த்துக் கொண்டால், அது நமது தொழிலுக்கு ஒத்து வராது என்றுணர்ந்த ஜி.டி.நாயுடு அவர்கள், தாமே ஷேவிங் செய்து கொள்வதே சிறந்தது என்ற முடிவுக்கு வந்தார். சுய சவரம் செய்த ஜி.டி.நாயுடுவின் முகத்தில் பிளேடுகளால் பல வடுக்கள், காயங்கள், ரத்தக் கசிவுகள் ஏற்பட்டுவிட்டன. முக சவரம் செய்திட நாயுடு பயன்படுத்திய பிளேடுகள் எல்லாமே - போதிய அளவுக்குக் கூர்மை இல்லை. அதனால்தான் முகத்தில் ரத்தக் காயங்களும், வடுக்களும் ஏற்பட்டுவிட்டன என்பதை உணர்ந்த ஜி.டி.நாயுடு புதிய பிளேடு கண்டுபிடித்தால் என்ன என்று எண்ணி, அதற்கான செயலில் ஈடுபட்டார். தோல்வியே ஏற்பட்டது அவரது முயற்சிக்கு! இலண்டன் நகரை விட்டு, நாயுடு ஜெர்மன் நாட்டிலுள்ள பெர்லின் நகருக்குச் சென்று முக சவரம் செய்து கொள்ள அங்குள்ள ஒரு கடைக்காரனை எவ்வளவு பணம் என்று நாயுடு கேட்டார். அவன் ஜெர்மன் நாணய மதிப்பில் ஒரு மார்க்கு என்றான். ஒரு மார்க்கு கூலி அதிகமானது என்று எண்ணிய ஜி.டி.நாயுடு, கடையை விட்டு வெளியேறி, ஜெர்மன் பிளேடுகளிலே சிலவற்றை வாங்கிப் பார்த்து, அவற்றில் மக்களால் மதிக்கப்படும் பிளேடு எதுவோ, அதனால் அவர் சவரம் செய்து பார்த்தார். பழையபடி அவர் முகம் ரத்தக் காயங்களாயின; அதனால் வடுக்களும் உண்டாயின. இவற்றை மீண்டும் முகத்தில் கண்ட நாயுடு அவர்கள், மறுபடியும் புதிய பிளேடு கண்டுபிடிக்கும் முயற்சியிலே ஈடுபட்டார் அவர். அதற்கான விஞ்ஞானச் சோதனைகளை நாயுடு அவர்கள், பெர்லின் சோதனைச் சாலைகளிலே சென்று ஆராய்ச்சி நடத்தினார். “ஹெயில் பிரான்” என்ற ஒரு நகரம், ரசாயனப் பொருட்களுக்குப் புகழ்பெற்ற இடமாகும். அங்கே "கோபர் - ஆப் டெல்டாஸ்" என்ற பெயருடைய ஒரு விஞ்ஞானியின் சோதனைச் சாலை இருந்தது. அந்தத் தொழிற் சாலையின் நிருவாகிகளை நாயுடு அணுகி, 'நான் ஒரு விஞ்ஞான சோதனை நடத்த விரும்புகிறேன். எனக்கு ஒரு சிறு இடம் ஒதுக்கித் தரமுடியுமா என்று கேட்டார். அதற்கு அந்த நிருவாகம் அவருடைய முயற்சியை ஏற்றுத் தனி இடம் ஒன்றை உருவாக்கி, அந்த அறையில் விஞ்ஞான சோதனைக்கு வேண்டிய எல்லா வசதிகளையும் செய்து கொடுத்தது. தனது பிளேடு கண்டுபிடிப்பின் முதல் முயற்சியை, அந்த கோயர் - ஆஸ்பெல்டரிஸ் தொழிற் கூடத்திலே தான் ஜி.டி. நாயுடு துவக்கினார். சோதனை மேல் சோதனைகளை நடத்திக் கொண்டே இருந்தார். இரவும் - பகலும் அதே சோதனையிலேயே தொடர்ந்து ஈடுபட்டார். சில நாட்கள் இவ்வாறு அவர் இடைவிடாமல் செய்த சோதனைகளால் வெற்றியைப் பெற்றார். உயர்ந்த ரகமான, தரமான ஒரு பிளேடைக் கண்டுபிடித்து, அதற்கு "ரேசண்ட் பிளேடு" என்று பெயரிட்டார். விஞ்ஞான அறிவு பெற்ற பல வித்தகர்கள் நடமாடும் தொழிற்சாலை அது என்பதால், அங்கே தினந்தோறும் வந்து போகும் அறிவியல் ஆய்வாளர்கள், ஜி.டி. நாயுடுவின் ரேசண்ட் பிளேடு கண்டுபிடிப்பை வெகுவாகப் பாராட்டினார்கள். பிளேடின் பெயரையும், பிளேடையும் ஜெர்மன் நாட்டிலேயே பதிவு செய்து கொள்ளுமாறு, பாராட்டிய பண்பாளர்கள் ஜி.டி.நாயுடு அவர்களிடம் வற்புறுத்திக் கூறினார்கள். அவர்கள் எண்ணம் சரியானதுதான் என்று நம்பிய ஜி.டி. நாயுடு அவர்கள், 600 மார்க்குகள் கட்டணம் கட்டித் தனது பிளேடை ஜெர்மன் நாட்டிலே பதிவு செய்தார். ரேசண்ட் பிளேடு மின்சார சக்தியால் இயங்கக் கூடியது. பிளேடுக்குரிய மோட்டாரை ஜெர்மன் நாட்டிலும், கைப்பிடியை சுவிட்சர்லாந்து நாட்டிலும் ஜி.டி.நாயுடு தயாரித்தார் என்பது குறிப்பிடத்தக்க சம்பவமாகும். பிளேடு தயாரிப்பதற்குரிய உயர்ந்த ரக இரும்பை நார்வே நாட்டிலே இருந்து அவர் பெற்றார். பத்தாயிரம் பிளேடுகளை முதன் முதலாக உற்பத்தி செய்தார். அவற்றை உலகம் எங்குமுள்ள தனது நண்பர்களுக்கும், தெரிந்தவர்களுக்கும் சிலவற்றை அனுப்பி வைத்தார். நன்றாக அந்தப் பிளேடுகளை விளம்பரம் செய்யுமாறு நாயுடு அவர்களைக் கேட்டுக் கொண்டார். இலண்டன் நகரில் உள்ள கடைக்காரர்களை நாயுடு அணுகி, தனது பிளேடுகளை அவரவர் கடைகளின் காட்சி அறைகளில் மக்களின் பார்வைக்கு வைக்குமாறு கேட்டுக் கொண்டதற்கு அவர்கள் மறுத்துவிட்டார்கள். பிறகு, சில்லறைக் கடைக்காரர்களைப் பார்த்து, பிளேடு ஒன்றை 15 ஷில்லிங்குக்குத் தருவதாகவும், அவற்றை விற்றுக் கொடுக்கும்படியும் கேட்டார்; ஒரு சிலர் நாயுடு கூறியதைக் கேட்டுக் கொண்டு அவ்விதமே செய்தார்கள். சில நாட்களுக்குப் பிறகு, சிறு கடைக்காரர்கள் கடைகளில் பிளேடுகள் நன்றாக, பரபரப்பாக விற்பனையானதால், நாயுடு பிளேடுகளுக்கு அங்கே நல்ல மரியாதை உண்டானது. இலண்டன் சிறு கடைகளில் நாயுடு அவர்களின் ரேசண்ட் பிளேடுகளுக்கு நல்ல விற்பனைகள் பெருகி, பிளேடுகளுக்கு கிராக்கி உருவானதால், பிளேடு ஒன்றுக்கு 10 ஷில்லிங் விலையை ஏற்றினார். ஒரு பிளேடு 25 வில்லிங் விலைக்கு அவை விற்கப்பட்டன. இரண்டே மாதத்தில் இலண்டனில் மட்டும் 7500 பிளேடுகள் போட்டிப் போட்டு விற்பனையாயின. அதே ரேசண்ட் பிளேடுகள் இந்தியா விற்பனைக்கும் வந்தன. ஒரு பிளேடு விலை 9 ரூபாய்க்கு விற்றது. இவ்வாறு நாயுடு பிளேடுகள் இலண்டன் கடைகளிலே போட்டிப் போட்டு விற்பனையானதால், ஏற்கனவே விற்றுக் கொண்டிருந்த பழைய நிறுவனங்களது பிளேடுகளுக்கு எல்லாம் செல்வாக்குக் குறைந்துவிட்டது. இதனால் வியாபாரிகளுக்கு இடையே பொறாமை ஏற்பட்டது, அவர்கள் நாயுடு பிளேடுகளின் விற்பனையைக் கண்டு அஞ்சினார்கள். எப்படியாவது நாயுடு பிளேடுகளின் விற்பனைச் செல்வாக்கைக் குறைக்க வியாபாரிகள் நினைத்தார்கள், முடியவில்லை. நாளுக்கு நாள் ரேசண்ட் பிளேடுகளின் விற்பனையே பெருகின. எனவே, பழைய நிறுவனக்காரர்கள் - தங்களது பிளேடுகளின் விற்பனையைப் பெருக்கவும், இழந்த விற்பனைச் செல்வாக்கை மீண்டும் மக்களிடம் நிலை நாட்டிடவும், நாயுடு பிளேடுகள் விற்பனையைத் தகர்க்கவும் திட்டமிட்டார்கள். இலண்டன் நகரத்திலே உள்ள ஒரு பெரிய இங்லிஷ்காரர் நிறுவனம், 'டெலி ரேசர் - Tele razor' என்ற பெயரில் ஒரு புதிய பிளேடைத் தயாரித்துக் கடை வீதிகளுக்கு அனுப்பி விற்கச் செய்தார்கள். பிளேடு ஒன்றின் விலை 15 ஷில்லிங்குக்கு விற்றிட அந்தப் புதிய நிறுவனம் ஏற்பாடு செய்தும் கூட, நாயுடு அவர்களின் பிளேடுகள் விற்பனைச் செல்வாக்கை அது உடைத்தெறிய முடியாமல் தோற்றுவிட்டது. இதிலும் நாயுடுவே இலண்டன் வியாபாரிகளைத் தோற்கடித்து விட்டார். விலையைக் குறைத்து விற்றிட்ட புதிய நிறுவனமும் நாளடைவில் மூடப்பட்டு விட்டது. இலண்டனில் தனது பிளேடுகளுக்கு நல்ல விற்பனைக் கிராக்கியை உருவாக்கிய ஜி.டி. நாயுடு அமெரிக்கா சென்றார். நாயுடு அவர்கள், அமெரிக்கா போவதற்கு முன்பாகவே, அவரது பிளேடுகள் அமெரிக்கர்களிடம் நல்ல செல்வாக்கோடு விற்பனையாகிக் கொண்டிருந்ததால், அமெரிக்கா சென்ற நாயுடுவை அங்கிருந்த பெரிய நிறுவனங்கள் சில அவரைப் பாராட்டிப் பெருமைப்படுத்தின. அமெரிக்க வணிகர்கள் ஜி.டி. நாயுடுவின் விஞ்ஞான விந்தையைப் பாராட்டியதோடு நில்லாமல், உலகம் புகழும் ரேசண்ட் பிளேடு விற்பனை உரிமையைத் தங்களுக்கு வழங்க வேண்டு மென்று கேட்டார்கள். அமெரிக்க வியாபார நிறுவனங்கள் எப்படியாவது ரேசண்ட் பிளேடு விற்பனை உரிமையைப் பெற்றுவிடுவது என்று, ஒன்றுக் கொன்று போட்டியிட்டு நாயுடுவை அணுகின. அந்த நிறுவனங்களில் பெரிய நிறுவனம் ஒன்று விக்டர் என்ற அமெரிக்க வியாபார நிறுவனம். அதன் முதலாளியான விக்டர் என்பவர், ஜி.டி. நாயுடு தனது நிறுவனத்தில் பணி செய்ய விருப்பப்பட்டால், அவருக்கு மாதம் 3000 டாலர், அதாவது இன்றய இந்திய நாணய மதிப்பின்படி 225000 ரூபாய் மாதச் சம்பளம் தருகிறேன்; வேலைக்கும் வைத்துக் கொள்கிறேன் என்ற வாக்குறுதியை வழங்கி, பணியில் சேருமாறு நாயுடுவைப் பார்த்துக் கேட்டார். அதை திரு. ஜி.டி. நாயுடு மறுத்து விட்டார். தமிழ் நாட்டில் யு.எம்.எஸ். என்ற மோட்டார் கூட்டுறவு நிறுவனத்தை உருவாக்கி, 200 பேருந்துகளுக்கு மேல் நடத்துபவர் ஜி.டி. நாயுடு. ஆயிரக் கணக்கானத் தொழிலாளர்கள் அவரது அதிகாரத்தில் பணி புரிகிறார்கள். அப்படிப்பட்டவர் இன்னொருவருடைய நிறுவனத்தில் பணிக்கமர்வாரா ? அதனால், அந்த அமெரிக்க முதலாளியின் அன்பான வாக்குறுதி அழைப்பை ஏற்க நாயுடு மறுத்து விட்டார். மற்றொரு அமெரிக்க முதலாளி ஜி.டி.நாயுடு விடம் பேசும்போது, ரேசண்ட் பிளேடு உரிமையைத் தனது நிறுவனத்துக்கு உரிமையாக்கினால், "மூன்று லட்சம் டாலர் அதாவது, 15 இலட்சம் ரூபாயை விலையாகக் கொடுக்கத் தயார்" என்று கேட்டுக் கொண்டார் அன்றைய காலக்கட்டத்தில அது மிகப்பெரிய தொகை. அதையும் திரு. ஜி.டி. நாயுடு ஏற்க மறுத்து விட்டார். வேறொரு அமெரிக்க முதலாளி, ஜி.டி. நாயுடுவிடம் உரையாடியபோது, "எனது சொந்த ஊரான சிகாகோ என்ற நகரத்தில், உமது ரேசண்ட் பிளேடு தொழிற்சாலையை உருவாக்குகிறேன். அங்கே ரேசண்ட் பிளேடுகளைத் தயாரிப்போம். விற்பனையில் கிடைக்கும் மொத்த லாபத் தொகையில் பாதி அளவை, அதாவது 50 சதவிகிதத்தை உமக்குப் பணமாகக் கொடுக்கின்றேன்" என்று தெரிவித்தார். அதையும் ஜி.டி. நாயுடு அவர்கள் சிரித்துக் கொண்டே மறுத்து விட்டார். இவ்வாறு அமெரிக்க முதலாளிகள் ஒவ்வொருவராகப் போட்டிப் போட்டுக் கொண்டு வலைவீசி, ஆசை காட்டி, ஜி.டி. நாயுடுவை பணிய வைக்க முயன்றார்கள். பிளேடின் உரிமையை விலைக்கு வாங்கப் போட்டிப் போட்டார்கள் என்றால், அந்த பிளேடின் தரம், திறம், செல்வாக்கு, மதிப்பு, மரியாதை எப்படிப் பட்டதாக இருந்திருக்க வேண்டும். இவ்வளவு பெரிய பொருட் குவியலை; அந்த ரேசண்ட் பிளேடு அமெரிக்காவில் ஜி.டி.நாயுடுவின் காலடியில் குவித்த போதும்கூட, அவற்றை எல்லாம் ஜி.டி.நாயுடு துச்சமெனத் துக்கி எறிந்தார். காரணம் அந்த பிளேடு தமிழ் மண்ணிலேயே தயாராக வேண்டும்; உற்பத்தி செய்யப்பட்ட அந்த ரேசண்ட் பிளேடுகள் தமிழ் மண்ணிலே இருந்து, பாரதப் பூமியிலே இருந்து ஏற்றுமதியாகி உலகெங்கும் கொடி கட்டிப் பறந்து, அதன் பெருமை, செல்வாக்கு, மதிப்பு, மரியாதை, புகழ் அனைத்தும் இந்திய மண்ணுக்கே வந்தடைய வேண்டும் என்ற தேச பக்தி உணர்வால்; அமெரிக்கர்களது பணக் குவியல் பேராசையைத் துக்கி எறிந்தார் நாயுடு அவர்கள். ஜி.டி. நாயுடுவின் இந்த முயற்சிக்கு அப்போது சென்னை மாநில ஆட்சியின் செயலாளர்களாகப் பணியாற்றிக் கொண்டிருந்த எம்.ஏ.சீனிவாசன், எஸ்.வி.இராமமூர்த்தி என்பவர்கள் அதற்கான பணிகளில் உதவி செய்திட முன் வந்தார்கள். ஆனால், தில்லியிலே உள்ள அரசு அவர்களுக்கு உதவிட முன்வராமல் இருந்துவிட்டது ஒரு காரணம். என்றாலும், நார்வே நாட்டில் கிடைத்திட்ட உயர் ரகம் இரும்பு இந்தியாவில் கிடைக்காததும் மறு காரணமாக அமைந்தது. அதனால், இன்று வரை ரேசண்ட் பிளேடு தயாரிப்பகம் இந்தியாவிலும், தமிழ் நாட்டிலும் அமைக்கப்படாமலே போய் விட்டது

No comments: