தமிழகத்தின் மொத்த வருவாயில் 21 சதவீதம் பத்திரப்பதிவு வருமானம் மூலம் கிடைக்கிறது. முதலில் டாஸ்மாக். அதற்கடுத்து இதுதான் அதிக வருவாய் ஈட்டும் இனம். கரோனோ சமயத்தில் பத்திரப்பதிவு சுருண்டு படுத்து விட்டது. டாஸ்மாக் எப்பொழுதும் போல ஸ்டெடி. அது ஒரு தனியினம். மிக புராதனமான இந்திய சட்டங்களில் பத்திரப்பதிவுக்கு அடிப்படையான இந்திய முத்திரை சட்டம். கொஞ்சம் லேட்டஸ்ட். சமீபத்தில் 1899ல் தான் எழுதப்பட்டது.
இந்திய முத்திரை சட்டத்தை (1899) படிக்கும்போது, இந்திய பதிவு சட்டத்தையும் (1908) சேர்த்து படிக்க வேண்டியிருக்கும். (32000 ஆயிரம் கோடி முத்திரை தாள் மோசடி பற்றி கடைசியில் காண்க.)
முத்திரை தாள் கட்டணம் என்பது ஒரு வரி. முக்கிய நோக்கம் அரசுக்கு வருவாய் ஈட்டுவது. இந்தியாவில் பத்திரப்பதிவுக்கு அதிக கட்டணம் வசூலிப்பதில் தமிழகம் இரண்டாவது இடம். சில ஆவணங்களுக்கு முத்திரைக் கட்டணம் கட்டாயம்.முத்திரைத்தாள் ஜுடிசியல் (Judicial, நான்–ஜுடிசியல் (Non-Judicial) என்று இரண்டு வகை.ஜுடிசியல் முத்திரைகள் நீதித்துறைக்கு உள்ளே சொத்து வழக்கு மற்றும் நீதிமன்ற வழக்குகளுக்கு பயன்படுபவை.
நான்–ஜுடிசியல் முத்திரைகள் பத்திரப்பதிவு அலுவலகம், இன்சூரன்ஸ் அக்ரிமென்டு, ப்ரோநோட்கள் (Pronotes) போன்றவற்றில் பயன்படுகின்றன.
முக்கியமாக சொத்து பரிமாற்றங்கள் இந்த சட்டத்தின் கீழ் வருகின்றன.
பதிவுசெய்யப்படும் போது அந்த குறிப்பிட்ட சொத்தின் மதிப்பை பொறுத்து முத்திரைத்தாள் கட்டணம் நிர்ணயிக்கப்படும். சொத்து இருக்கும் மாநிலம் எது, கிராமமா அல்லது நகர்ப்புறமா, புதிய கட்டுமானமா, பழைய கட்டுமானமா என்பதை பொறுத்தும் கட்டணம் கணக்கிடப்படும்.சில மாநிலங்களில் பெண்கள் பெயரில் சொத்துக்களை பதிவு செய்தால் முத்திரை கட்டணம் குறைவு
டெல்லியில் பெண்களுக்கு 4%, ஆண்களுக்கு 6%.இந்தியாவெங்கும் இதை அமுல் செய்தால் பெண்கள் பெயரில் சொத்துக்கள் வாங்குவது அதிகரித்து பெண்களின் நிதி பாதுகாப்பு அதிகரிக்கலாம்.இந்த சலுகையில்லாமலே கடந்த சில வருடங்களில் பெண்கள் பெயரில் பதிந்த சொத்துக்கள்தாம் தமிழகத்தில் அதிகம் என்பதை இங்கே சொல்ல வேண்டியதில்லை.
முத்திரைத்தாள் தொடர்பான விதிமுறைகள்
கட்டணத்தை முழுமையாக செலுத்தவேண்டும். தவறினால், பாக்கி தொகையின் மீது அபராதம் விதிக்கப்படும். (வங்கியாளர்களும் கவனிக்க)சரியான நேரத்தில் செலுத்த வேண்டும். தாமதமாக கட்டலாம். ஆனால் அபராதம் செலுத்த நேரிடும். முத்திரைத்தாள் செலுத்தப்பட்ட ஆவணம் சட்டப்பூர்வ ஆவணமாக (Legally Valid Document) கருதப்படும் இவற்றை நீதிமன்றத்தில் ஆதாரமாக பயன்படுத்தலாம் (உதா: பிராமிஸரி நோட்)
சொத்து விஷயத்தில் வாங்குபவரே கட்டணத்தை செலுத்தவேண்டும்.
சொத்து பரஸ்பர மாற்றம் (Exchange) செய்யும் போது, வாங்குபவரும் விற்பவரும் சரிசமமாக கட்டணத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும்.
பத்திரங்களை பதிவுசெய்தல்
சொத்துக்களை வாங்குபவர் அல்லது விற்பவர் பெயரில் மட்டுமே முத்திரைத்தாள்களை வாங்க வேண்டும். வாங்கிய 6 மாதங்களுக்குள் உபயோகித்துவிடவேண்டும். முத்திரை தாள் கட்டணத்தை குறைக்கவோ, அதிகரிக்கவோ முடியாது. கிரைய பத்திரத்தை முழுவதும் வெள்ளை தாளில் எழுதி, முத்திரை தீர்வை பணமாகவும் செலுத்தலாம். பத்திரப்பதிவில் தேவையான தகவல்கள் இல்லை, தவறு இருக்கிறதென்று பதிவாளர் கருதினால் அவர் ஆவணத்தை பதிய மறுத்துவிடலாம். வீடு இருக்கும் பகுதி, கட்டப்பட்ட ஆண்டு, அடுக்குகளின் எண்ணிக்கை போன்ற தகவல்களை சரியாக குறிப்பிட வேண்டும். பாகப்பிரிவினை பத்திரம், அடமானப்பத்திரம், விற்பனை சான்றிதழ், பரிசு பத்திரம், பரிமாற்றப் பத்திரம், குத்தகை பத்திரம், உரிம ஒப்பந்தம் போன்ற அனைத்து தேவையான ஆவணங்களையும் சமர்பிக்க வேண்டும்.உயில் மூலம் பரிமாற்றம் செய்யப்பட்ட சொத்துக்களை தவிர்த்து மற்ற அனைத்து அசையா சொத்து பரிமாற்றத்திற்கும் முத்திரைத்தாள் கட்டணம் செலுத்த வேண்டும்.கூட்டுறவு வீட்டுவசதி வங்கி மூலம் விற்கப்படும் சொத்துக்களுக்கு கட்டணம் இல்லை சட்டப்பூர்வமான வாரிசுகளுக்கு சொத்துக்களை மாற்றும் போதும் , சொத்தின் சந்தை மதிப்பிற்கு ஏற்ப ஒரு கட்டணம் செலுத்த வேண்டும்.பதிவு அலுவலகத்தில் மட்டும்தான் பத்திர பதிவு நடக்கும் என்றில்லை. ஜெயிலில் இருக்கும் மதிப்பானவர்கள் பெயிலில் வெளிவந்தால் பதிவாளர் வீட்டிற்கே வந்து பதிந்து கொடுப்பார். கட்டணம் சரியாக செலுத்தினால் போதுமானது.
முத்திரைத்தாள் கட்டணம் செலுத்தாமல் சொத்துரிமை மாற்றம் செய்வது எப்படி?
பணம் பெற்றுக்கொண்டு சொத்துரிமையை மாற்றம் செய்தால் அது சொத்து விற்பனை. தானப் பத்திரம் மூலம் சொத்துரிமையை மாற்றுவது விற்பனையல்ல.குடும்ப உறவுகளுக்குள் தானமாக வழங்குவதாக பத்திரத்தில் பதிவு செய்வதை தான செட்டில்மென்ட் என்று சொல்லுவார்கள்.
தந்தை பிள்ளைகளுக்கு கொடுப்பது, சகோதரர் சகோதரிக்கு சொத்தை தருவது இதெல்லாம் தானம்.தானம் தரும் சொத்து, தானம் எழுதுபவர் பெயரில் இருக்கவேண்டும்."மாமனாரின் சொத்தை கொழுந்தனார் எனது பெயரில் தானமாக எழுதியுள்ளார், அதில் வீடுகட்ட வீட்டுக்கடன் கிடைக்குமா" என்று ஒரு பெண்மணி வந்து நச்சரித்தார். வங்கி வேலை எவ்வளவு சிரமம் பாருங்கள்.
கொளுந்தியாளுக்கு தானம் எழுதுவதையும் சட்டம் அனுமதிக்கிறது. சட்டம் ஒரு இருட்டறை.தானமாக பதிவுசெய்யும்போது முத்திரைத்தாள் கட்டணம் இல்லை. ஆனால், தான பத்திரம் பதிவு கட்டணம் செலுத்த வேண்டும். சொத்து வழிகாட்டி மதிப்பில் 1% அல்லது அதிகபட்சம் பத்தாயிரம் ரூபாய்.
முக்கிய தகவல்: தானம் வாங்குபவர் தானம் கொடுத்த சொத்தை ஏற்று உடனடியாக சுவாதீனத்தை அடைந்து கொள்ளுங்கள். அந்த இடத்தின் வருவாய் ஆவணங்கள், பிற ஆவணங்களையும் உடனடியாக தனது பெயருக்கு மாற்றி விடுதல் நல்லது.தானம் ரத்து செய்ய இயலாத ஒன்று என்று சொல்லப்படுகிறது.
இருப்பினும் "சொத்தை தானமாக எழுதி வாங்கி கொண்ட மகன் தங்களை கவனிக்காமல் விட்டுவிட்டான்" என்று பெற்றவர்கள் புகார் கொடுத்ததால் தானத்தையே கேன்சல் பண்ணி தமிழ்நாட்டில் ஒரு பிரபல தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.
மின் முத்திரை / இ-ஸ்டாம்பிங்
மின்னணு முறையில் உருவாக்கப்பட்டது மின் முத்திரை. இது சொத்து வாங்குதல் போன்ற நான்–ஜுடிசியல் முத்திரையாக பயன்படுகிறது.
இ-ஸ்டாம்பிங் பாதுகாப்பான முறையாக கருதப்படுகிறது. பிறகு ஏன் இது கட்டாய படுத்தப்படவில்லை. 01.07.2020) இந்திய முத்திரை தாள் சட்டத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதன்படி "பங்குகள், கடன் பத்திரங்கள் மற்றும் சில பத்திரங்களின் பரிவர்த்தனைகளில், மாநிலங்கள் இனிமேல் ஒரே விகிதத்தில்முத்திரை வரியை வசூலிக்க வேண்டும்"
32000 ஆயிரம் கோடி போலி முத்திரை தாள் மோசடி:
நாட்டையே உலுக்கிய போலி முத்திரைத்தாள் மோசடியில் தெல்கியை கர்நாடக காவல்துறை 2001 நவம்பரில் கைது செய்தது. மோசடியின் மதிப்பு 2,000 ரூபாய் கோடியென்று ஆரம்பத்தில் சொன்னார்கள். உண்மை நிலவரம் 32,000 கோடி வரையிருக்குமென்று என்று கூறப்படுகிறது. இந்தியாவின் தனிமனித மோசடிகளில் இதுவே பிரமாண்டமானது என்று சொல்லுகிறார்கள். இதை நம்பலாம்.
திரு.தெல்கி ஒரு சாமான்யர். கர்நாடக ரயில்வே பிளாட்பாரங்களில் வடை விற்றவர். அவர் மஹாராஸ்ட்ரா, குஜராத் உட்பட 12 மாநிலங்களில், ஆயிரக்கணக்கான பதிவு அலுவலகங்களில் தனிமனிதனாக போலி முத்திரைத்தாள்களை விநியோகித்தார் என்று இன்னமும் வடை விற்கிறார்களே அதையும் நம்ப வேண்டியிருக்கிறது😁
No comments:
Post a Comment