Followers

Thursday, March 2, 2017

இளையராஜா ஆர்க்கெஸ்ட்ரேஷன் மேதைமைக்குச் சான்றுகள். ..

காற்றில் கலந்த இசை. ...
பருவங்களின் கூட்டிசை. ....! !
இளையராஜாவின் படைப்பாற்றல் உச்சத்தில் இருந்த சமயத்தில் தயாரிக்கப்பட்ட படங்களில் நடிக்கும் பாக்கியம் மோகனுக்கு அதிகமாகவே கிடைத்தது. இன்றும் மோகன் ஹிட்ஸ் என்ற பெயரில் விற்கப்படும் சிடிக்களில் அவரது படத்தைவிடப் பெரிய அளவில் சிரித்துக்கொண்டிருப்பது இளையராஜாதான். தமிழ்த் திரை இசையின் வசந்த காலமான 80-களில் மோகனை நாயகனாக வைத்து ஆர். சுந்தர்ராஜன், கே. ரங்கராஜ் என்று பல இயக்குநர்கள் ‘இனிய கானங்கள் நிறைந்த படங்களாக எடுத்துத் தள்ளிக்கொண்டிருந்தனர்.
அந்தப் பட்டியலில் இடம்பெறும் முக்கியமான இயக்குநர் மணிவண்ணன். ‘திரில்லர்’, குடும்பக் கதைகள், அரசியல் விமர்சனம் என்று பல்வேறு வகைப் படங்களை இயக்கிய மணிவண்ணன், இறுதிவரை இளையராஜாவின் மீது பெரும் மதிப்பும் அபிமானமும் கொண்டிருந்தார். 1983-ல் அவரது இயக்கத்தில் வெளியான ‘இளமைக் காலங்கள்’ படத்தின் பாடல்கள் மிகப் புகழ் பெற்றவை. கோவைத் தம்பியின் ‘மதர்லேண்ட் பிக்சர்’ஸின் இரண்டாவது தயாரிப்பு இப்படம்.
இப்படத்தில் எஸ்.பி.பி. ஜானகி பாடிய ‘இசை மேடையில் இன்ப வேளையில்’ பாடல் முகப்பு இசை தரும் சுகந்தம் செழுமையானது. வசந்தத்தை மீட்டும் பெண் குரல்களின் ஹம்மிங்குடன் பாடல் தொடங்கும். ஹம்மிங்கின் மேலடுக்கில் ஜானகியின் அதிரசக் குரல் சிணுங்கும். பள்ளத்தாக்கின் மீது படர்ந்திருக்கும் காற்றில், சிறகை அசைக்காமல் பறந்துகொண்டிருக்கும் பறவையைக் காட்சிப்படுத்தும் வயலின் இசைக் கோவையைத் தொடர்ந்து, ‘இசை மேடையில்…’ என்று பாடத் தொடங்குவார் ஜானகி.
பல்லவியின் சில நொடிகளில் எஸ்.பி.பி.யின் மெல்லிய ஹம்மிங் வந்துபோகும். இளமையின் உற்சாகத்தை உணர்த்தவோ என்னவோ குதிரைக் குளம்பொலியைப் போன்ற தாளக்கட்டை இப்பாடலுக்குத் தந்திருப்பார் இளையராஜா. நிரவல் இசை முழுவதும் வயலின்களின் ராஜாங்கம்தான். முகப்பு இசையில் பயன்படுத்தியதுபோலவே இரு வேறு அடுக்குகளில் ஜானகியின் ஹம்மிங்கையும், பெண் கோரஸ் குரல்களையும் ‘மிக்ஸிங்’ செய்திருப்பார் ராஜா.
மோகன் இளையராஜா கூட்டணியின் முக்கியக் கண்ணி எஸ்.பி.பி.யின் குரல். இந்தப் பாடலில் அதை உறுதியாக நிரூபித்திருப்பார் எஸ்.பி.பி. ‘முத்தம் தரும் ஈரம் பதிந்திருக்கும்’ எனும் வரியின் இறுதியில் சின்ன பிர்கா ஒன்றைத் தருவார். ‘கொன்னுட்டான்யா’ என்று தோன்றும். இரண்டாவது நிரவல் இசையில் ‘பாப்பபப பாப்பப’ எனும் ஹம்மிங்கை ஜானகி பாடுவார். அதைத் தொடர்ந்து வரும் ஹம்மிங் ஆண் தன்மையும், பெண்ணின் இனிமையும் கலந்த குரலாக ஒலிக்கும். அது ஜானகியின் ஹம்மிங்கா, எஸ்.பி.பி.யுடையதா என்று குழம்பாமல் அப்பாடலைக் கடந்துவர முடியாது. அந்த அளவுக்கு எதிர்பாராத சுவாரஸ்யங்களைத் தனது இசையில் இளையராஜா புகுத்திய காலம் அது.
இப்படத்தில் ஷைலஜா பாடும் ‘படிப்புல ஜீரோ நடிப்புல ஹீரோ’ பாடல், அக்கால ‘ஆடம் டீஸிங்’ பாடல்களில் ஒன்று என்றாலும், வேகமான அதன் தாளக்கட்டும் ஷைலஜாவின் கூர்மைக் குரலும் வித்தியாசமான அனுபவத்தைத் தரும்.
இப்படத்தில் சுசீலாவுடன் ஷைலஜா இணைந்து பாடும் ‘ராகவனே ரமணா ரகுநாதா’ பாடலில் பஜன் பாடல்களுக்குரிய பக்தி மணமும், காதல் ரசமும் ஒரு புள்ளியில் இணைவதை உணரலாம். நிதானமான தாளக்கட்டில் வீணை, புல்லாங்குழல் ஆகிய இசைக் கருவிகளுடன் தனது வயலின் ஆர்க்கெஸ்ட்ரேஷன் முத்திரையை இணைத்து இளையராஜா உருவாக்கிய பாடல் இது. இரண்டாவது நிரவல் இசையில் வயலின் இசைக் கோவையின் மேலடுக்கில் ஒலிக்கும் சுசீலாவின் ஆலாபனை, இப்பாடலின் உச்சபட்ச இனிமைத் தருணம்.
இப்படத்தில் ஜேசுதாஸ் பாடிய ‘ஈரமான ரோஜாவே’ பாடல் பெரும் வரவேற்பைப் பெற்றது. பேஸ் கிட்டாரின் அஸ்திவாரத்தில் எழுப்பப்பட்டிருக்கும் காதல் சோக கீதம் இது. தாளக்கட்டில் மிருதங்கத்தின் ஒரு துளி, முதல் நிரவல் இசையில் கனத்த நெஞ்சின் விம்மலைப் போன்ற வயலின் கீற்று, விரக்தியை வெளிப்படுத்தும் விசில் என்று இப்பாடலின் ஒவ்வொரு நொடியிலும் இசை நுணுக்கங்களைப் புதைத்திருப்பார் இளையராஜா. இரண்டாவது நிரவல் இசையில் பனியால் உருவான மேகத்தின் நகர்வைப் போன்ற வயலின் இசைக் கோவை, நம்மைத் தழுவியபடி நகர்ந்து செல்வதை உணர முடியும்.
இப்படத்தின் மிக முக்கியமான, அற்புதமான டூயட், ஜேசுதாஸ் சுசீலா பாடிய ‘பாட வந்ததோர் கானம்’ பாடல். சுசீலாவின் ‘லாலலா’வுடன் தொடங்கும் இப்பாடலிலும் தாளக்கட்டில் மிருதங்கத்தைப் பயன்படுத்தியிருப்பார் இளையராஜா. பல்வேறு இசைக் கருவிகளின் நடுவே பியானோவைப் பிரதானமாக ஒலிக்கச் செய்த அரிதான பாடல்களில் ஒன்று இது.
பல்லவியிலிருந்தே பியானோவின் உரையாடல் தொடங்கிவிடும். முதல் நிரவல் இசையில் விண்கல்லின் வீழ்ச்சியைப் போன்ற ஒற்றை வயலின் நீட்சி ஒலிக்கும். சரணத்தில், ‘கண்ணில் குளிர்காலம்… நெஞ்சில் வெயில் காலம்’ எனும் வரியின்போது அந்த இரண்டு பருவங்களையும் இசையாலேயே உணர்த்தியிருப்பார் இளையராஜா. பாந்தமான அமைதியுடன் ஜேசுதாஸும், காதலின் பரவசத்தை வெளிப்படுத்தும் குரலில் சுசீலாவும் அற்புதமாகப் பாடியிருப்பார்கள்.
இளையராஜா பாடல்களின் உடனடி வெற்றிக்கு, தனித்த சுவை கொண்ட மெட்டுக்கள் காரணம் என்றால் 30 ஆண்டுகள் தாண்டியும் அவை ரசிகர்களின் மனதில் வியாபித்திருப்பதற்குக் காரணம், வெவ்வேறு மனச் சித்திரங்களை எழுப்பும் அவரது ஆர்க்கெஸ்ட்ரேஷன்தான். இப்படத்தில் இடம்பெற்ற அத்தனைப் பாடல்களும் அவரது ஆர்க்கெஸ்ட்ரேஷன் மேதைமைக்குச் சான்றுகள். ...
நன்றி. ....சந்திர மோகன். .....

No comments: