Followers

Tuesday, January 28, 2020

தேசம் காப்போம்

இந்து மதம் அழிய வேண்டும். இந்து கோவில்கள் இல்லாமல் செய்ய வேண்டும் என்பது வெறும் மதக்காழ்ப்புணர்வு மட்டுமல்ல. இந்தியாவை துண்டாட வேண்டுமென்றால் இந்து மதம் அழிய வேண்டும்.
ஏனென்றால் இந்தியாவை இணைத்து இருப்பது இந்து மதம் தான். பல்வேறு கலாச்சாரங்கள் கொண்ட இத்தேசத்தில் ஒவ்வொரு மாநிலத்திலும் வேறு வேறு மொழிகள், பழக்கவழக்கங்கள், கலாச்சார வேறுபாடுகள் இருந்தாலும் இந்தியாவை ஒன்றிணைப்பது இந்து மதம். பிஹாரிக்கும் சிவன் தெய்வம் எனக்கும் சிவன் தெய்வம். ஒடிசாவிலும் கிருஷ்ணன் கடவுள் குஜராத்திலும் கிருஷ்ணன் கடவுள். காஷ்மீரத்திலும் ராமரை வணங்குகிறார்கள் வங்காளத்திலும் ராமர் வணங்குகிறார்கள்.
இப்படி இந்திய மாநிலங்களை ஒன்றிணைப்பது இந்து மதம் தான். இந்தியாவை வேறு படுத்த வேண்டுமென்றால் இந்துமதத்தை சிதைக்க வேண்டும். அப்படி சிதைக்க நினைக்கும் சக்திகள் தமிழகத்தில் உண்டு என்பது எல்லோருக்கும் தெரியும். அவர்கள் அவ்வப்போது சில விஷயங்களை கையில் எடுப்பார்கள்.
தமிழகம் தேசிய நீரோட்டத்தில் இருந்து விலகி இருப்பதை உறுதி செய்து கொள்வது அவர்கள் பொறுப்பு. இந்த அவர்கள் யாரென்று நான் சொல்லி உங்களுக்கு தெரியவேண்டியது இல்லை. கோயில்களில் அவர்கள் அவ்வப்போது கை வைப்பார்கள்.
அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்று ஒன்றை கிளப்புவார்கள். இப்போது கொண்டு வந்திருப்பது தமிழில் குடமுழுக்கு, தமிழில் மட்டுமே வழிபாடு என்பது.
இவர்கள் சொல்வதெல்லாம் மேம்போக்காக பார்த்தால் சரியானது தானே என்று தோன்றக்கூடும். இந்து மதத்தின் மீதும் இந்தியாவின் மீதும் மாறா பற்று இருக்கும் சில நண்பர்கள் கூட அவர்களின் பிரச்சாரத்தால் இது சரியான ஒன்றுதானே, ஏன் இதை எதிர்க்க வேண்டும்? தமிழ்நாட்டில் தமிழிலேயே வழிபாடு மேற்கொள்வது என்ன தவறு என்று கேட்கிறார்கள் இந்த பதிவு அவர்களுக்குத்தான்.
சரி..தமிழ்நாட்டில் தமிழிலேயே எல்லா வழிபாடும் நடக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அப்போது தமிழர்களுக்கு வழிபாடு புரியும் என்கிற உங்கள் வாதத்தையும் அப்படியே ஏற்றுக் கொள்கிறேன். வெளிமாநிலத்தில் இருந்து வருபவர்களுக்கு...? அவர்களுக்கு எப்படி புரியும்?
அவர்களுக்கு ஏன் புரிய வேண்டும்? புரியாவிட்டால் வரவேண்டாம் என்று நீங்கள் சொல்வதுதான் இந்த சதியின் நோக்கமே. வேறு எங்கும் இருந்து இங்கே யாரும் கோயில்களுக்கு வரக்கூடாது. இது முதல் படி.
அடுத்து தமிழில் வழிபாடு நடக்கும் கோயில்கள் மட்டும்தான் நமக்கு உரியது என்கிற எண்ணம் சிறிது சிறிதாக விதைக்கப்படும். இங்கிருந்து காசி, பத்ரிநாத், கேதார்நாத் போன்ற புண்ணிய ஷேத்திரங்கள் செல்பவர்கள் தமிழ் பற்று இல்லாதவர்கள் என்கிற நிலை தோற்றுவிக்கப்படும்.
அவ்வளவு ஏன்? அருகே இருக்கும் திருப்பதி சபரிமலை போன்ற புனித ஸ்தலங்கள் கூட இந்தப் பட்டியலில் சேர்ந்துவிடும். ஏனென்றால் அங்கே தமிழ் வழிபாடு செய்ய வேண்டும் என்று கேட்டால் உதைக்க வந்துவிடுவார்கள். எனவே அங்கே தமிழ் இருக்கப்போவதில்லை.
ஏற்கனவே இங்கே ஆயிரம் கோயில்கள் இருக்க திருப்பதிக்கு ஏன் செல்லவேண்டும் என்கிற பேச்சுக்கள் எல்லாம் சமீபத்தில் எழுந்தன.
இப்போது இங்கே இருந்து சமஸ்கிருதத்தை விரட்டுவார்கள். பின்பு வேறு எங்காவது சமஸ்கிருதம் இருந்தால், அங்கே நீங்கள் போனாலும் விரட்டுவார்கள். இதற்கெல்லாம் நீங்கள் செவி சாய்த்துக் கொண்டு துணைபோக போகிறீர்களா?
சமஸ்க்ருதம் பார்ப்பன மொழி என்கிற அவர்களின் பிரச்சாரத்திற்கு மீண்டும் மீண்டும் செவி சாய்ப்பதை விட்டொழியுங்கள். சமஸ்கிருதம் நம் ஆன்மீக கலாச்சார தெய்வீக மொழி. இந்து மதத்தின் அடிப்படையே வேதங்கள் தான். அந்த வேதங்கள் இருப்பது சமஸ்கிருதத்தில் தான். சமஸ்கிருதத்தை நாம் காக்க வேண்டியது இன்றியமையாதது. இது ஒரு சாதாரண மொழி அல்ல என்பதை உணருங்கள்.
இந்துமதத்தை அழிக்க வேண்டுமானால் முதலில் சமஸ்கிருதத்தை ஒழிக்கவேண்டும். பார்ப்பனர்களை இல்லாமல் செய்யவேண்டும் என்பதுதான் அவர்களின் நோக்கம்.மறைமுகமாக நீங்களும் அதற்கு துணை போகிறீர்கள். மற்ற மதங்களில் உள்ள வழிபாட்டுத் தலங்களில் எல்லாம் தமிழை கேட்காதவர்கள் இங்கு மட்டும் நுழைகிறார்கள் என்றால் என்ன அர்த்தம் என்று நீங்கள் புரிந்து கொள்ள வேண்டாமா?
நம் கோயில்களில் தமிழுக்கான இடம் எப்போதும் இருந்துதான் வருகின்றது. தேவாரம் திருவாசகம் நாலாயிர திவ்யப் பிரபந்தங்கள் எல்லாமே பாடப்பட்டு வருகின்றன. யாரும் அவற்றை எதிர்க்கவில்லை.
ஆனால் அந்தந்த கோயில் ஆகம விதிப்படி சமஸ்கிருதத்தில் வேத கோஷங்கள் மந்திரங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. நாமும் உணர்வுபூர்வமாக இத்தனை ஆண்டு காலமாக ஒற்றுமையாக ஒன்றி வருகிறோம். திடீரென்று அந்தந்த பிராந்தியத்திற்கு ஏற்ப அந்தந்த மாநில மொழிகளில் எல்லோருமே பயன்படுத்திக் கொண்டு வந்தால் அந்த ஒற்றுமையும் ஒன்றுதலும் உணர்வு ரீதியாக நம்மிடையே இருக்குமா? இருக்கவே முடியாது. கொஞ்சம் கொஞ்சமாக நம் கலாச்சாரத்தையும் கோயில்களையும் இல்லாமல் செய்ய ஒரு வழி தான் இந்த திடீர் தமிழ் பற்று.
இதை உணராமல் போலி தமிழ் பற்றுக்கு பலியாகி விடாதீர்கள். நீங்கள் மட்டும் தமிழன் அல்ல, நானும் தமிழன் தான். ஆனால் விழிப்புடன் இருக்கும் தமிழ் பேசும் இந்து. அதைவிட முக்கியமாக இந்தியன்.

No comments: