Followers

Tuesday, June 14, 2016

ஒரே சமயத்துல 10 தயாரிப்பாளர்களோட படங்களுக்கு இசையமைப்பாரு. இளையராஜா நடிகர். இயக்குனர் மனோபாலா




இளையராஜாவைப் பற்றி பேச வேண்டும் என்றால் ஒரு நாள் முழுக்க பேசிக்கொண்டே இருந்தாலும் அலுக்காது. அதுக்கு காரணம் அவரோட இசைதான். உதவி இயக்குநராக இருக்கும்போதே எனக்கு இளையராஜா சாரோட பழக்கம் உண்டு. அதுதான் என்னோட வாழ்க்கையில எனக்கு கிடைச்ச மாபெரும் வாய்ப்பு. மியூசிக் கம்போசிஷன் செய்யும்போது இயக்குநருடன் இருக்க ஒரேயொரு உதவி இயக்குநருக்குதான் வாய்ப்பு கொடுப்பார் ராஜா. அப்படியான வாய்ப்பு என்னுடைய இயக்குநர் பாரதிராஜா சார் மூலமாக எனக்குக் கிடைச்சிருக்கு. இளையராஜா சார் பிஸியா இருந்த காலகட்டத்துல ஏராளமான சம்பவங்கள் நடந்திருக்கு” என்று எடுத்த எடுப்பிலேயே இசைஞானி பற்றி டாப் கியரில் பேச ஆரம்பிக்கிறார் இயக்குநரும் நடிகருமான மனோபாலா!
“சென்னை கடற்கரை சாலையில் இருக்குற வி.ஜி.பி.யிலதான் இளையராஜா ரூம் போடுவாரு. 110வது அறை எப்பவும் அவரோடதா இருக்கும். அவரைச் சுற்றி இருக்கிற மற்ற எல்லா அறைகளையும் தயாரிப்பாளர்கள் புக் பண்ணியிருப்பாங்க. ஒரே சமயத்துல 10 தயாரிப்பாளர்களோட படங்களுக்கு அவர் இசையமைப்பாரு. அதுக்கு காரணம், எப்போ ராஜா கம்போசிங்குக்கு கூப்பிடுவாருன்னு தெரியாது. ஆனா அந்த சமயத்துல முதல்ல அவர் பாடல் கம்போஸ் பண்றது பாரதிராஜாவுக்குதான். அவரோட அஸோசியட் டைரக்டர் நான்தான் என்பதால, டைரக்டர்கூட போவேன். அதிகாலை 4.30 மணிக்கு வி.ஜி.பி. கடற்கரையோரம் ராஜா சார் வாக்கிங் போவாரு. அப்போ, டைரக்டரும், நானும் கூடப் போவோம். அப்படி போகும்போது நிறைய விஷயங்களை ராஜா சார் எங்ககிட்ட பகிர்ந்திருக்காரு.
எங்க படத்துக்கு கம்போசிங் பண்ணும்போது, ரெண்டு மூணு ட்யூனை போட்டுக் காட்டுவாரு இளையராஜா. டைரக்டரோ, “நான் நினைச்ச மாதிரி வரலையா...”ம்பாரு. அதுக்கு ராஜாவோ, “என்னய்யா நினைச்ச?”ன்னு கேட்பாரு. ‘என்னமோ நினைச்சேன். அதைச் சொல்லத் தெரியல. தெரிஞ்சா... சொல்ல மாட்டனா?. அது கொஞ்சம் நல்லாயிருக்கும்...” இப்படி எங்க டைரக்டர் எதை எதையோ சொல்லுவாரு. “என்னதான்யா... உங்க டைரக்டரு நினைக்கிறாரு...?”ன்னு என்னைப் பார்த்து இளையராஜா கேட்பாரு. “கொஞ்சம் மந்திரம் மாதிரி இருந்தா நல்லாயிருக்கும் சார். அதாவது ஸ்லோகம் மாதிரி...ஐய்கிரி...நந்தினி..மேதவி....”ன்னு நான் சொல்லுவேன், அப்படி ராஜா சார் இசையமைச்ச பாட்டுதான் ‘புதிய வார்ப்புகள்’ படத்தில் வர்ற “நம்தன... நம்தன... தாளம் வரும் புது ராகம் வரும்...” பாட்டு!
அதேமாதிரி கவியரசு கண்ணதாசன், இளையராஜா காம்பினேஷனில் வேலைப் பார்த்ததையும் மறக்க முடியாது. எல்லோருமே நிமிர்ந்து பார்க்கிற ஒரு மனிதர் கண்ணதாசன். அவரோட வரிகளுக்கும் ராஜா சார் இசையமைச்சிருக்காரு என்பதை நினைக்கும்போது எனக்குப் பெருமையா இருக்கு. கண்ணதாசன் சாரோட வேகத்துக்கு எல்லாம் எந்தவொரு பாடலாசிரியராலும் எழுதவே முடியாது. அந்த வகையில் “வான் மேகங்களே...” என்னோட கிளாசிக்!.
பொதுவா ஒவ்வொரு உதவி இயக்குநருக்கும் தான் வேலை பார்க்கிற படத்தோட பின்னணி இசையின்போது உடனிருக்கணும்னு ஆசைப்படுவாங்க. எனக்கும் அந்த ஆசை இருந்துச்சு. அதனால, ‘புதிய வார்ப்புகள்’ படத்தோட எடிட்டிங் முடிஞ்சதும் அடுத்தது ரீரெக்கார்டிங்தான்னு முடிவானதுமே, நான் தயாராயிட்டேன். காலையில ஏழு மணிக்கே ராஜா சார் அலுவலகத்துல போய் நின்னுட்டேன். இப்போ மாதிரி டிஜிட்டல் எல்லாம்
கிடையாது. அப்போ ரீல் ரீல்லாதான் போடணும். அப்படி ஒன்றரை நாளில் மொத்த ரீரெக்கார்டிங்கையும் முடிச்சு, கையில கொடுத்திட்டாரு. அசுர வேகம்னு சொல்வாங்களே... அப்படி அசுர வேகமாகத்தான் இசையமைப்பாரு இசைஞானி!
பாடலுக்காக ஹார்மோனியத்துல ராஜா சார் கை வைச்சா அந்த அறையே தெய்வீகக் கலையாயிடும். அவர் இசையமைப்பதைப் பார்க்கும்போது, ‘அய்யோ... இந்த மனுசன் எவ்ளோ நாள் வேணா இருந்துட்டுப்போகட்டுமேன்னு தோணும். எங்க ஆயுளையெல்லாம் கூட எடுத்துங்க. அவரை வாழ விடுங்கன்னு அந்த கடவுளுகிட்ட சொல்லத் தோணும். நினைச்சுப் பாருங்க. இவ்ளோ நல்ல பாடல்களை அவரைத் தவிர, வேறு யாரு கொடுத்திட முடியும்? 18 ஜி.பி.க்கு ராஜா சாரோட கலெக்ஷன் வைச்சிருக்கேன். என்னால இளையராஜா பாடல்களை கேட்டுக்கிட்டே, சென்னையிலிருந்து கன்னியாகுமரி வரை போய்விட முடியும்!
இதுவரை யாருக்கும் சொல்லாத ஒரு ரகசியத்தையும் உங்ககிட்ட சொல்றேன். பொதுவா, ஒரு படத்துக்கு பூஜை போட்டதும் முதல்ல பாடலைத்தான் ரெக்கார்டிங் பண்ணுவாங்க. அப்படி ராஜா சார் ஸ்டூடியோவுல ரெக்கார்டு ஆகிற பாடலோட கேசட்ஸ் எல்லாம், எனக்கு தனியா வந்திடும். அப்போ ஸ்டூடியோவுல பாண்டுன்னு ஒருத்தர் இருப்பாரு. அவரோட உதவியால, இளையராஜா சாரோட பல பாடல்களை நான் கடத்திக்கிட்டு வந்திருக்கேன். அந்தப் பாடல்கள் எதுவும் என்னோட படம் கிடையாது. யார் யாரோட படமாகவோ இருக்கும். அப்படி, இயக்குநர் மகேந்திரன் சாரோட ‘உதிரிப்பூக்கள்’ படத்தோட பாட்டெல்லாம் எனக்கு முன்னாடியே வந்துடுச்சு. உண்மையிலேயே அவர் அந்தப் பாட்டையெல்லாம் கேட்டாரான்னா தெரியாது. எல்லோருக்கும்
முன்னால நான் கேட்டுடுவேன். எப்படீன்னா... இரவு எட்டரை மணிக்கு ஸ்டூடியோவுக்குப் போய், பாண்டு மூலமா கேசட் எடுத்துக்கிட்டு வந்து, அதே ஸ்டூடியோவுல இருக்குற ஒரு தென்னை மரத்துக்கு அடியில உட்கார்ந்து பாடல்களைக் கேட்பேன்.
என்னோட சில படங்களுக்கு இசையமைக்க உட்காரும்போது, ராஜா சார்கிட்ட, ‘சார்... அந்தப் படத்துல அந்த மாதிரி போட்டிருந்தீங்களே... எனக்கு அப்படியொரு பாட்டு வேணும்”னு சொல்வேன்’. அவரு, “அதான் அந்தப் படத்திலேயே போட்டுட்டேனே... மறுபடியும் அது எதுக்கு?”ம்பாரு. அதனால, நான் கொஞ்சம் பெரிய ஆளுங்களா இருக்குற நவுஷாத் மாதிரியான இசைக் கலைஞர்களோட பாட்டு மாதிரி ஒண்ணு கொடுங்கன்னு கேட்பேன். “என்னமா பாட்டு போட்டுருக்கான்யா... நாமெல்லாம் ஒண்ணுமேயில்ல...” என்பார். என்கிட்ட 1934ல் இருந்து இசையமைக்கப்பட்ட பல படங்களோட ஆடியோ கேசட் இருக்கு. அதுல எஸ்.டி.பர்மன்ல தொடங்கி பல பேரு இருக்காங்க. அந்த கலெக்ஷன்ல இருக்குற டிவிடிக்கள் எல்லாத்தையும் ராஜா சார்கிட்ட கொண்டுபோய் கொடுத்தேன். அந்தப் பாட்டை எல்லாம் கேட்டவரு, “இந்த ஜாம்பவான்கள் இருக்குற கூட்டத்துல, நானும் ஒருவனா இருக்கிறதே ஒரு சாதனைதானே...” என்றார். ‘சாதனையை எல்லாம் கடந்து, நீங்க எங்கேயோ போய்ட்டீங்க சார்’ன்னு பதில் சொன்னேன். இந்திய உலகின் சாதனையாளராக இளையராஜா இருப்பதற்குக் காரணம், அவரது அயராத தேடலும், இன்னும் சிறப்பான படைப்பு ஒன்றை அளிக்க வேண்டும் என்கிற ஆர்வமும்தான்.
சினிமாவுல நாம ஒரு கதையை எழுதி, ஒரு காட்சியில காதலன் தன்னோட காதலியை காதலோட பார்க்குறான்னு சொல்லிடலாம். அதைப் படமாகவும் எடுத்துடலாம். ஆனா, இயக்குநர்கள் சொல்லாத ஒரு கதையை திரையில் கொண்டு வருவது என்பது இளையராஜாவின் இசையால் மட்டுமே சாத்தியம்!” என்று சிகரம் வைத்தது போன்ற வார்த்தைகளை உதிர்த்து, இளையராஜா பற்றிய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார் இயக்குநர் மனோபாலா.

No comments: