Followers

Tuesday, October 10, 2017

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்


7.6.2006 துக்ளக் (சோ) தலையங்கம்
ர்ச்சகர் வேலை என்பது வெறுமனே சுவாமி சிலையின் மீது பூக்களை விட்டெறிகிற வேலையல்ல. அதற்கென்று தனியாக படிப்பு இருக்கிறது. சமஸ்கிருத மந்திரங்களின் அர்த்தங்களைப் புரிந்து கொண்டிருக்க வேண்டும். பூஜை விதிமுறைகளில் தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும். இதற்கு ஆழ்ந்த சம்ஸ்கிருத அறிவு தேவை. இவற்றையெல்லாம் வகுப்பெடுத்துச் சொல்லி தந்துவிட முடியாது. அது இயல்பாகவே வரவேண்டிய ஒன்று. சங்கீதம், நடனம் மாதிரித்தான் புரோகிதம் செய்வதும், அர்ச்சகராவதும்.
நாளை ஒரு அரசு 'அனைத்து மதத்தினரும் அர்ச்சகர் ஆகலாம்' என்று ஏன் உத்தரவிட முடியாது?
பிற மதத்துக்காரர் ஒருவர் அர்ச்சகர் ஆக பணிபுரிய விரும்பி, அதற்கான பயிற்சியைப் பெற்று, அர்ச்சகர் ஆகி கோவில் பணி முடிந்தவுடன், தன் சொந்த மதத்தின் வழிபாடுகளை நடத்திக் கொள்ளலாமே?
நாளையே ஒரு அரசு, கோவில் அர்ச்சகர்கள் திறந்த மார்புடன், கச்சம் வைத்த வேட்டியைக் கட்டிக்கொண்டு அர்ச்சனை செய்வது அநாகரிகமாக இருக்கிறது, இது இன்டீஸன்ட் எக்ஸ்போஷர், அதனால் இனி அர்ச்சகர்கள் பாண்ட், ஷர்ட் அணிந்துதான் அர்ச்சனை செய்வார்கள் என்று உத்திரவிடமுடியாதா...
கோவிலில் நைவேத்யமாகப் படைப்பது, அசைவ உணவு சாப்பிடுபவர்களை இழிவுபடுத்துவதாக இருக்கிறது. அதனால் இனி எல்லா கோவில்களிலும் அசைவ உணவு நைவேத்யம் செய்யப்படலாம். சிக்கன் மட்டன் கருவாடு போன்றவையும் தெய்வங்களுக்கு நைவேத்யம் செய்யப்படலாம்.
பெண்களும் அர்ச்சகர்கள் ஆகலாமே? சரிநிகர் சமானம் என்ற நாகரிக உலகில் ஆண்கள்தான் அர்ச்சகர்கள் ஆக முடியும் என்பது கொடுமை அல்லவா. முழுவதும் இல்லாவிட்டாலும் 33% அர்ச்சகர்கள் பெண்களாகத் தான் இருக்கவேண்டும். இன்னும் கொஞ்சம் புரட்சி செய்யலாம். மாதவிலக்கு நாட்களிலும் அந்த அர்ச்சகிகள் கோவிலில் அர்ச்சனை செய்யலாம்.
ஆகமங்களை மாற்றுகிற உரிமை யாருக்கு இருக்கிறது.
ஆத்திகர்களுக்கே, ஆச்ச்சார்யர்களுக்கே மாற்றுகிற அந்த உரிமை கிடையாது.
இந்த மாதிரி மாற்றங்களைச் செய்ய ஒரு மதச்சார்பற்ற அரசு முனைவது அரசியல் சட்ட விரோதமானது. ஆத்திகத்துக்கு எதிரானது.
அப்படி ஆகமத்தில் சில மாற்றங்களைச் செய்யவேண்டும் என்றால், அது மதத் தலைவர்கள், ஆச்சார்யர்கள் போன்றவர்களால் எடுத்துக்கூறப்பட்டு, ஆத்திக சமூகம் ஏற்று பின்னர் வரலாம்.
அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகும் போராட்டத்தின் மூலம் மிரட்டி தங்கள் நோக்கத்தை நிறைவேற்றி கொள்வது போல, பெரியார், அண்ணா சிலைகளுக்கு மாலையிடக் கூடாது; அவர்கள் ‘சமாதி’க்கு மாலை வைக்கக் கூடாது என்று ஒரு கும்பல் கிளம்பி போராட்டம் நடத்தினால், ஏற்றுக் கொள்வார்களா?
'பிராம்மணர்கள்தான் அர்ச்சகர் ஆகலாம் என்பது இப்போதுள்ள நிலை' என்கிற எண்ணம் தவறானது. ஆகம விதிமுறைப்படியான கோவில்களில் அன்றும் சரி, இன்றும் சரி பிராம்மணர்கள், அர்ச்சகர்கள் ஆக முடியாது. சொல்லப் போனால், கர்ப்பகிரஹத்தினுள்ளேயே நுழைய முடியாது. விக்ரஹத்தை தீண்ட முடியாது. அப்படி நடந்தால் அது ஆகம விதிமுறை மீறல்.”
சிவாச்சார்யார்கள்..
"சிவாச்சார்யார்கள் என்கிற பரம்பரையில் வந்தவர்கள்தான் அர்ச்சகர்கள் ஆக முடியும். இது ஆகம விதி. (இவர்களுக்கும், மற்ற பிராம்மணர்கள் என்று பொதுவாகச் சொல்லப்படுகிறவர்களுக்கும் இடையே திருமண சம்மந்தம் வைத்துக் கொள்ளப்படுவதில்லை. அந்த அளவிற்கு, இவர்கள் பொதுவான பிராம்மணர்களிலிருந்து, தனிப்பட்டவர்களாக இருக்கிறார்கள்.)"
வைணவக் கோவில்களில்..
"வைஷ்ணவக் கோவில்களில், இரண்டு வகை உண்டு. ஒன்று - வைகானஸ முறையைப் பின்பற்றுகிற கோவில்கள்; மற்றொன்று - பாஞ்சராத்ர முறையைப் பின்பற்றுகிற கோவில்கள்; இதில் வைகானஸ முறை கோவில்களில் வைகானஸ பிரிவினர்தான் அர்ச்சகர்கள் (வைஷ்ணவ கோவில்களில், இவர்கள் பட்டாச்சாரியர்கள் என்று அழைக்கப்படுகின்றனர்) ஆக முடியும். பாஞ்சராத்ர வழிமுறையில் அமைந்துள்ள கோவில்களில், அந்த ஆகமம் மூன்று நிலைகளைக் கூறுகிறது; இவற்றில் மூன்றாவது நிலையில் எந்தப் பிரிவினர் வேண்டுமானாலும் தகுதி பெற்று பூஜை செய்யலாம்; முதல் இரண்டு நிலைகளில் முடியாது".
மற்ற கோவில்களில்..
"ஆங்காங்கே வேறு சில வழிமுறைகளைப் பின்பற்றுகிற கோவில்களும் பல உண்டு. சிதம்பரம் நடராஜர் கோவிலில் 'பதஞ்சலி பூஜாஸூத்ரம்' விதிக்கிற வழிமுறைகள் பின்பற்றப்படுகின்றன; அங்கு தீட்சிதர்கள் தவிர வேறு யாரும் கர்ப்பக்கிரஹத்தினுள் போக முடியாது; மத குருமார்களாக இருந்தாலும் சரி, பெரிய ஆச்சார்யராக இருந்தாலும் சரி, அவர்களுக்கும் அனுமதி கிடையாது. மேல்மலையனூர் கோவிலில் பிராம்மணரல்லாத 'பர்வத ராஜ' குலத்தினர்தான் அர்ச்சகர்கள்; மற்றவர்களுக்கு உரிமை கிடையாது. கேரளத்தில், 'பரசுராம கல்பஸூத்ரம்' என்ற நூல் விதித்திருப்பவைதான் வழிமுறை...."
ஆகமமும் சிவாச்சாரியார்களும்..
ஆகம சாத்திரத்தின்படி பிரதிஷ்டை நடந்து, கும்பாபிஷேகம் செய்யப்பட்டு, ஆகம விதிமுறைகளின் படியே பூஜைகள் நடத்தப்படுகிற கோவில்களில், ஆகமத்தில் சொல்லியுள்ளபடி சிவாச்சார்யார்களே அர்ச்சகர்கள் ஆக முடியும்; மற்றவர்கள் யாராவது "பிராம்மணர்கள் உட்பட" கர்ப்பக்கிரஹத்தினுள் நுழைந்தாலும் சரி, விக்ரஹத்தைத் தீண்டினாலும் சரி, பூஜை நடத்தினாலும் சரி, புனிதம் கெடும்; பிராயச்சித்தங்கள் செய்ய வேண்டும்.
அர்ச்சகர் பெற்றிருக்கிற உரிமை 'பரார்த்த பூஜை'; அதாவது மற்றவர்களுக்காக செய்கிற பூஜை. இதைச் செய்ய சிவாச்சார்யார்கள் தவிர, வேறு எவருக்கும் - அவர் எவ்வளவு உயர்ந்த கல்வி, வேத ஞானம், சாத்திர அறிவு, பக்தி எல்லாவற்றையும் பெற்றிருந்தாலும் சரி - உரிமை கிடையாது. இது ஆகம விதி.
சிவாச்சார்யார் குலத்தில் பிறந்திருந்தால் மட்டும் போதாது; ஸ்ம்ஸ்க்ருத அறிவு; வேதங்களைப் பயின்றிருத்தல்; ஆகமங்களை முழுமையாக அறிந்திருத்தல்; தர்ம சாத்திரம், மற்றும் கிரியா சாத்திரம் ஆகியவற்றில் நிபுணத்துவம்; சைவ சித்தாந்த தத்துவ ஞானம்; ஆசாரங்களை கடைப்பிடித்தல்; தீட்சை பெற்றிருத்தல்; சைவ மந்திரம், முத்திரைகள், கிரியை முதலியன பற்றிய அறிவு; மீமாம்ஸை, வியாகரணம், தர்க்க சாத்திரம் ஆகியவை பற்றிய அறிவு என்று பல தகுதிகளைப் பெற்றிருக்க வேண்டும்; அப்படிப்பட்டவர்கள்தான் அர்ச்சகர் ஆக முடியும். இவை அனைத்தையும் பெற்றிருந்தாலும், சிவாச்சார்யார் தவிர வேறு யாரும் அர்ச்சகர் ஆக முடியாது.
அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர்கள் ஆகலாம் என்பது ஆகம விதிகளுக்குப் புறம்பானது என்பது நிச்சயம். ஆகம விதிமுறைப்படி பிரதிஷ்டை நடந்து, அதன்படி வழிபாடுகளும், பூஜைகளும் நடக்கிற கோவில்களில், அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்று தீர்மானிக்கப்பட்டால் - அது ஆகம விரோதமே.
ஆனால், ஆகம விதிமுறைகளின்படி அல்லாமல், பிரதிஷ்டை நடந்து, பூஜைகளும் நடக்கிற கோவில்கள் பல உண்டு. அவற்றில் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆவது ஆகம விரோதம் அல்ல.

No comments: