Followers

Thursday, November 9, 2017

< விடியும் வரை காத்திரு(ந்த அந்த இரவு) தந்த பயங்கரம்... >> .


நிகழ்ந்த துர்முகி நாமஸம்வத்ஸரம், தக்ஷிணாயனம், சரத்ருது, கார்த்திக மாஸம் சுக்லபக்ஷம் அஷ்டமி திதி பௌமவாஸரம் தனிஷ்டா நக்ஷத்திரம் கூடிய சுபயோக சுபதினத்தில் சுபமுஹூர்த்த நேரமான இரவு 8 மணிக்கு டி.வியில் வெண்தாடியோடு தோன்றிய அந்த பெரியவர் "ப்யார் மித்ரோன் ஔர் தேஷ்வாசியோன்" என்று சுக்லாம்பரதரம் சொல்லி செய்த ப்ரஸங்கம் அந்த க்ஷண நேரத்தில் எல்லோருக்கும் இடியாய் இறங்கியது என்னவோ உண்மை. இன்று அந்த இரவைப்பற்றி நினைத்தால் எல்லோரையும் போல நானும் பயந்தேன் என்பதைவிட குழம்பினேன் என்றுதான் சொல்லத்தோன்றுகிறது.
.
மறுநாள் காலையில் எப்போதாவது போகும் வாக்கிங் என்கிற சம்பிரதாயம் அன்று காலை மெனக்கெட்டு செய்யத்தோன்றியது. தெருவில் நடந்தபோது எப்போதும் எதிரில் புன்னகைக்கும் இரண்டு மூன்று பேர் அன்று மட்டும் துர்முகி வருடத்தின் பெயரைப்போலவே துர்முகமாக களையிளந்து கடந்தனர். அவர்களைப் பார்த்ததிலிருந்து எனக்கு மனதில் ஒரு குறுகுறுப்பு... அதைத்தொடர்ந்து நடந்த நிகழ்வுகளையும் பார்த்த செய்திகளாலும் ஒரு உந்துதல் - பணமதிப்பிழப்பை ஏன் ஒரு சாரார் எதிர்க்கிறார்கள் என்பதை தெரிந்துகொள்ளவேண்டும் என்று... பயங்கரமான குழப்பத்தில் இருந்தவனுக்கு எதிர்ப்பவர்களது ஞாயங்கள் நான் எதிர்கொண்ட கீழ்கண்ட நிகழ்வுகள் புரியவைத்தன...
.
- நாள்தோறும் பார்த்து சந்தித்த சில நபர்கள் கோடிக்கணக்கில் ரொக்கமாக வைத்துக்கொண்டு அதை அவர்கள் புது ரூபாய்நோட்டாக மாற்ற பட்ட அவஸ்தையை கண்கூடாகப் பார்த்ததும்
.
- இன்னும் சில அக்கம்பக்கத்து நண்பர்கள் (அவ்வளவாக பரிச்சயமாகாதவர்கள் ஒருபடி மேலே போய் ) என்னை அணுகி வலுக்கட்டாயமாக நட்பு பாராட்டி பேச்சுவாக்கில் என் குடும்பத்தினரின் வங்கிக்கணக்குகளில் ஓரிரு லட்சங்கள் வைத்திருக்க ஒரு எமர்ஜென்ஸி உதவியாக தயக்கமில்லாமல் கேட்டதும்
.
- என் தெரு ப்ளாட்பார்மிலும் எதிரில் இருக்கும் மைதானத்திலும் சில பரிச்சயமற்ற திடீர் ஏஜென்டுகள் வங்கி வரிசையில் நின்று 4000-த்தை மாற்றிக்கொடுக்க சர்வ சாதாரணமாக யாரிடமோ கமிஷன் பேசியதை கண்கூடாக பார்த்ததும்
.
- நான் சென்ற வங்கியில் காசாளர் கால்கடுக்க வரிசையில் நிற்கும் எங்களை ஒரு மனிதனாக மதிக்காமல் வெறுப்படித்த அதே வேளையில் மூலையில் ஒரு கண்ணாடி அறையில் வங்கி மேலாளர் பெரிய தொழிலதிபரை ராஜஉபசாரம் செய்து அமரவைத்து, அந்த பேங்க் ப்யூன் கத்தைகத்தையாக ஆதார் ஜெராக்ஸை வைத்துக்கொண்டு வங்கி-சலானை பூர்த்தி செய்து கொண்டிருந்ததை பார்த்தும் .
.
- பேருந்துகளிலும் ரெயில்வே ரிசர்வேஷன் கவுண்டர்களிலும் 100, 50 ரூபாய் தாளுக்கு திடீர் மவுசு அதிகரித்தும் 500, 1000 ரூபாய் நோட்டுகளை மாற்ற முடியாமல் செயற்கை தட்டுப்பாட்டை உற்பத்தி செய்த காசாளர்களை பார்த்தும்
.
- மின்சார உபயோகக்கட்டணம் செலுத்த செக் வாங்கப்படாமல் கேஷாக அதுவும் 100, 50-ஆகவே வாங்கச்சொல்லி வாய்மொழி உத்தரவு கடைப்பிடிக்கப்பட்டதை பார்த்தும்
.
- மாநகராட்சி வரி பாக்கியை 500, 1000 ரூபாயாக கட்டலாம் என்று கூவிக்கூவி மாநகராட்சியினர் அலைந்ததைப் பார்த்தும்
.
- சில கடைகளில் வராத பாக்கியை சிலர் கட்டுக்கட்டாக 500-ம் 1000-முமாக கொண்டுவந்து குவித்தும் அதை கடைக்காரர் வாங்கமறுத்து சண்டையிட்ட காட்சியைப் பார்த்தும்
.
- அஷ்டலக்ஷ்மியாய் கும்பிடப்பட்டுவந்த பணக்கட்டு திடீரென்று கஷ்டலக்ஷ்மியாய் உருமாறி காட்சியளித்து அவலக்ஷணமாய் தாரித்ர்ய-துவம்ஸின்யையாக குப்பைத்தொட்டியில் தூக்கியெறியப்பட்டிருந்ததை பார்த்ததும்
.
- சிலபல கார் டீலர்களிடமிருந்து வரிசையாக என் காரை நல்ல விலைக்கு ரொக்கத்திற்கு வாங்க பார்ட்டி தயாராக இருப்பதாக தொடர் அழைப்புகள் வந்ததைக் கேட்டதும்
.
- எப்போதும் மாதாமாதம் 500-ம் 1000-ம் வாங்கிக்கொள்ளும் பால்காரரும் அண்ணாச்சிகடையும் தானாக முன்வந்து ஒருமாதமோ இரண்டுமாதமோ கழித்து புதிய ரூபாய் நோட்டாக கொடுக்கும்படி கூறியதை கேட்டதும்
.
- அந்த 10 நாட்கள் இரவுபகலாக தி.நகரில் உள்ள நகைக்கடைகளில் அட்சயத்ருதியை போல கூட்டம் அலைமோதியதை பார்த்தபோதும், அந்த தருணத்தில் பான் நம்பர்கள் சகட்டு மேனிக்கு உபயோகப்படுத்தப்பட்டதை அறிந்ததும்
.
- பெரிய திமிங்கிலங்களின் மறைமுக பணமாற்று கண்கட்டுசித்து விளையாட்டில் விட்டில்பூச்சிகளாய் அப்பாவிகள் உயிர்நீத்த கொடுமையை பார்த்ததும்
.
- கோபால் பல்பொடியைக் கரைத்துவிட்டு அந்த தண்ணீரை 2000 ரூபாய்நோட்டு புது உள்பாவாடை போல சாயம்போகிறது என்று வந்த வாட்ஸப் செய்தியைப் பார்த்ததும்...
.
நன்றாக புரிந்தது பணமதிப்பிழப்பு எப்படி மக்களை பாதிக்கிறது என்று...
.
பழயன-கழிதலும்-புதியன-புகுதலும் என்று 2917 போகிக்கு வாழ்த்துவதை ஒரு இரண்டரை மாதம் முன்பே இந்த அரசு கொளுத்திப்போட்டது போலும்... அதில் பழயவற்றை கழிக்கமுடியாத கூட்டத்தின் மூச்சுத்திணறலே இந்த கூச்சல் என்பது என் புரிதல்.
.
ஆயிற்று... ஒரு வருஷம்...! காந்தி தாத்தா கரன்ஸியில் இட-வலமாக மாறி...! அந்த நிகழ்வை பலர் இன்று ஆயுஷ்யஹோமமாக நினைத்து பட்டுடுத்தி இனிப்பு வழங்கி ஆனந்தித்தனர்.. சிலர் இழவு வீட்டு சோகக்களையில் கருப்புத்துணி உடுத்தி மார்பில் அடித்துக்கொண்டு டி.வியில் ஒப்பாரி வைத்து மூக்கில் பஞ்சு சொருகி பஞ்ச் டயலாக் பேசி ஆர்ப்பரித்தனர்...
.
ஆனால் இந்த பணமதிப்பிழப்பால் எனக்கு ஒரு பைசா லாபமோ ஒரு பைசா நஷ்டமோ இல்லை... இந்த நடவடிக்கை எந்த அரசு எடுத்திருந்தாலும் என் நிலைப்பாடு இதுவாகவே இருந்திருக்கும்...
.
என் வாழ்க்கைச்சக்கரம் எப்போதும் போல இன்பதுன்பம் மாறிமாறி அடித்து சுழன்றுகொண்டிருக்கிறது.
பணமதிப்பிழப்பு ஒரு களையெடுப்போ அல்லது களேபரமோ - இப்போது...
- என் கணக்கில் காசிருந்தால் எந்த ஏடிஎம்-மிலும் எப்போது வேண்டுமானாலும் முன்பு போலவே பணம் எடுக்கமுடிகிறது.
- மாதம் முதல்வாரத்தில் வீட்டுக்கடன் தவணை வந்து பயமுறுத்துகிறது
- வங்கியில் கூட்டம் இல்லாத இந்த நாட்களிலும் புன்னகையற்ற எரிச்சலான சேவை தொடர்ந்து கிடைக்கிறது.
- எப்பவும் போல பால் கணக்குக்கு பணமாக கொடுக்கமுடிகிறது,
- எப்பவும் போல மளிகை அண்ணாச்சி கடைக்கு பாக்கியில்லாமல் பணம் கொடுக்கமுடிகிறது... ( போன மாதம் அண்ணாச்சி கடை பையன் GST நம்பருடன் பில் கொண்டு வந்து கொடுத்து கூடவே செல்போன் போன்று ஒரு ஸ்வைப்பிங் மெஷினை கொடுத்து – சார் கார்டுல குடுத்துருங்க என்று அழிச்சாட்டியம் செய்தது வேறு கதை..! )
- கீரைக்காரம்மாவிடம் கார்டு கொடுத்து கடுப்படிக்காமல் பேரம் பேசாமல் சில்லரை தொகை பணமாக கொடுக்கமுடிகிறது.
- அர்ச்சகருக்கும் உண்டியலுக்கும் பணமாக சமர்ப்பிக்கமுடிகிறது.
- மருத்துவர்கள் பணமாக கேட்கும் தொகையை பணமாகவே கொடுக்கமுடிகிறது.
.
ஆக, கூலிக்கு மாரடிக்கும் மாதாந்திர சம்பளக்காரனான என் வாழ்க்கை முறையில் குறிப்பாக சம்பாதிக்கும் முறை, செலவழிக்கும் முறை, கணக்கு சமர்ப்பிக்கும் முறை எதிலும் பெரிய மாற்றம் இல்லை. நிஜம் இவ்வாறிருக்க, சிலர் பணமதிப்பிழப்பை எதிர்மறையாக விமர்சிப்பது போல எனக்கு கூவத்தோன்றவில்லை..!
.
ஆனாலும்,
- இப்பவும் லஞ்சம் கேட்கும் கபோதிகள் பணமாகவே கேட்கிறார்கள்..
- குழந்தைகள் படிக்கும் பள்ளியிலும் கல்லூரியிலும் கண்ட கண்ட காரணங்களுக்காக பீஸ் என்ற பெயரில் ரசீதில்லாமல் கேட்கநாதியில்லாமல் கொள்ளை தொடர்கிறது.
- காரணமில்லாமல் மெட்ரோ வாட்டர் வீட்டுகுழாயில் விநியோகத்தை மட்டுப்படுத்தி விட்டு டேங்கர் லாரி சப்ளையில் ஆயிரக்கணக்கில் ரொக்கமாக பில் இல்லாமல் தொழில் நடக்கிறது. இப்படி இன்னும் பல...
.
இவற்றையும் களைய இந்த அரசோ இனி வரும் அரசோ மீண்டும் ஒரு முறை பணமதிப்பிழப்பை கொண்டுவந்தாலும் தகும். அதனால் பாதிக்கப்படப்போவது நானோ என் போன்றோரோ இல்லை...
.
என்னால் பழயதையும் கழிக்கமுடிந்தது புதியதையும் ஏற்கமுடிந்தது... எந்த விதமான மூச்சுத்திணறலின்றி...!
.
ஏனென்றால் மடியில் கனமில்லை...!! அதனால் வழியில் / விழியில் பயமில்லை...!!!

No comments: