Followers

Wednesday, February 3, 2016

ஞான யோகம் மேற்கொள்ள கர்ம யோகப் பயிற்சியே முதல் படி

வேத வியாசர் எழுதி அருளிய மகாபாரதத்தின் இறுதிப் பகுதியில் வருவது உயர்ந்த ஞான சாத்திரமான பகவத் கீதை. அனைத்து உபநிடதங்களின் சாரமாகவும் கீதை விளங்குகிறது. பதினெட்டு அத்தியாயங்களையும் எழுநூறு சுலோகங்களையும் உள்ளடக்கியது.
ஆன்மாக்கள் இறைவனை அடைய வழிகாட்டும் உன்னத சாத்திரம் கீதை. பிறவியின் நோக்கம் பிறவாமையை எய்துவது ஒன்றே என்பது இந்து தர்மத்தின் சாரம். கீதையில் இக்கருத்து ஒவ்வொரு அத்தியாயத்திலும் பல இடங்களில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
சனாதனமான இந்து தர்மத்தின் அனைத்து பிரிவினருக்கும் (சைவம், வைணவம், சாக்தம், கௌமாரம், காணாபத்தியம், சௌரம்) பொதுவான சாத்திர நூல் பகவத் கீதை.
முதல் ஆறு அத்தியாயங்களில் கர்ம யோகம் (அல்லது) ஞான யோகம் மூலமாக ஜீவாத்ம ஞானம் பெறும் வழிமுறைகள் பேசப்பட்டுள்ளது.
இரண்டாவது ஆறு அத்தியாயங்களில் (ஜீவாத்ம ஞானம் பெற்ற நிலையில் உள்ள உபாசகன்) பக்தி யோகம் மூலமாக பரமாத்மவான இறைவனை அறியும் வழிமுறைகள் விளக்கப்படுகிறது.
இறுதியில் இடம்பெறும் ஆறு அத்தியாயங்களில் மேலும் சில விளக்கங்களுடன் சரணாகதி தத்துவத்தை கண்ணன் உபதேசித்து அருளுகிறான்.
சிவபெருமான் - அம்பிகை - மகா விஷ்ணு - விநாயகப் பெருமான் - முருகக் கடவுள் போன்றவை பரம்பொருளான இறைவன் எடுத்துக் கொண்ட முக்கிய வடிவங்கள்.
அனைத்து இறை வடிவங்களின் பிரதிநிதியாகவும் நின்று ஸ்ரீகிருஷ்ணன் அருளிச் செய்துள்ள உத்தமமான ஞான நூல் தான் பகவத் கீதை என்ற தெளிவான புரிதலுடன் கீதையை அணுகுதல் வேண்டும்
பொதுவாக கர்ம யோகம், ஞான யோகம், பக்தி யோகம் ஆகிய மூன்றும் இறைவனை அடையும் தனித்தனி வழிகள் என்றும் இம்மூன்றில் ஏதாவது ஒரு வழியை பின்பற்றி இறைவனை அடையலாம் என்ற தவறான கருத்து நிலவுகிறது.
கர்ம யோகம் அனைத்து மார்கங்களுக்கும் முதல் படி.
கர்ம யோகம் (அல்லது) ஞான யோகம் மூலம் ஒரு உபாசகன் தன்னை அறிவதான ஜீவாத்ம ஞானம் பெறுகிறான். ஜீவாத்ம ஞானம் பெற்றபின் பக்தி யோக பயிற்சி மூலம் பரமாத்வான இறைவனை அடைகிறான்.
கர்ம யோகம் நேரடியாக ஜீவாத்ம தரிசனத்தைப் பெற்றுத் தரும். ஆனால் ஞான யோக பயிற்சியை நேரடியாக தொடங்குதல் முடியாது என்று கீதை அறிவிக்கிறது. ஞான யோகம் மேற்கொள்ள கர்ம யோகப் பயிற்சியே முதல் படி எனவும் கீதை தெரிவிக்கிறது.

No comments: