Followers

Wednesday, July 11, 2018

ராணுவத்தின் பிடியில் பாகிஸ்தான் (துக்ளக் தலையங்கம்)


              வருகிற ஜூலை 25 - ஆம் தேதி பாகிஸ்தானில் தேர்தல் நடக்கவிருக்கிறது. இந்த நிலையில், ஜூலை 5 - ஆம் தேதி லஞ்ச - ஊழல் வழக்கில் விசாரணை நீதிமன்றம், பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃபுக்கு 10 ஆண்டுகளும், அவரது மகளுக்கு 7 ஆண்டுகளும், அவரது மருமகனுக்கு ஓராண்டும் சிறைத் தண்டனை விதித்துத் தீர்ப்புக் கூறியிருக்கிறது. நம் நாட்டில் காங்கிரஸைப் போல, முஸ்லிம் லீக்தான் பாகிஸ்தானின் பிரதானக் கட்சி. நவாஸ் ஷெரீஃப் அதன் பிரபலமான தலைவர். இத்தீர்ப்புக்கு முன்பாகவே நவாஸ் ஷெரீஃப் தேர்தலில் நிற்கக் கூடாது என்று கடந்த ஆண்டு ஜூலை மாதம் பாகிஸ்தானின் உச்ச நீதிமன்றமும் உத்தரவிட்டது. அவருடைய வழக்கு விசாரணைக்கு வருவதற்கு முன்பே, உச்ச நீதிமன்றம் அவரை குற்றவாளி என்று சமிக்ஞை காட்டிய பிறகு, கீழ் நீதிமன்றத்தில் அவருக்கு எப்படி நியாயம் கிடைக்கும்? பாகிஸ்தான் ராணுவத்தின் விருப்பப்படிதான் உச்ச நீதிமன்றம், ஷெரீஃப் பதவிக்கு வருவதை தடை செய்தது என்று நாம் முன்பே எழுதியிருந்தோம். (நினைத்துப் பார்க்கிறேன் - துக்ளக் - 9.5.2018).
பாகிஸ்தானை இதுவரை ராணுவம்தான் பாதி காலம் ஆண்டிருக்கிறது. 2013 வரை ஒரு முறை கூட, பாகிஸ்தானில் தேர்தல் மூலமாக ஆட்சி மாற்றம் நடக்கவே இல்லை. அரசாங்கம், பாகிஸ்தானின் உளவு ஸ்தாபனமான ஐ.எஸ்.ஐ., இந்தியாவை எதிர்க்கும் தீவிரவாத அமைப்புகள் மற்றும் உச்ச நீதிமன்றம் அனைத்தும், ராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள்தான் செயல்படுகின்றன. ராணுவத்துடன் ஒத்துப் போகாத அரசியல் கட்சிகளின் ஆட்சியை ராணுவம் கவிழ்த்து விடும். அதே காரணத்தினால் நவாஸ் ஷெரீஃபை, ராணுவத்தின் விருப்பத்திற்கிணங்க தேர்தலில் போட்டியிடாமல் உச்ச நீதிமன்றம் தடுத்திருக்கிறது.
மூன்று முறை பதவி நீக்கம் செய்யப்பட்ட ஷெரீஃப்
கடந்த 25 ஆண்டுகளாக நவாஸ் ஷெரீஃப்தான் பாகிஸ்தானில் மக்கள் செல்வாக்கு அதிகம் பெற்ற தலைவர். அவர் ராணுவத்துக்குக் கட்டுப்பட மறுத்ததால், அவரை ராணுவம் நேரடியாகவும், நீதிமன்றங்களின் மூலமாகவும் மூன்று முறை பதவியிலிருந்து நீக்கியது. அவர் 1990 - ல் பிரதமரானார். 1993 - ல் லஞ்ச - ஊழல் குற்றச்சாட்டுக் காரணமாக, அவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். 1997 - ல் மீண்டும் பிரதமரானார். 1999 - ல் பிரதமர் ஷெரீஃப், இந்தியப் பிரதமர் வாஜ்பாயுடன் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கும்போது, ஷெரீஃபுக்கே தெரியாமல், ராணுவத் தளபதி பர்வேஸ் முஷாரஃப் பாரதத்துடன் கார்கில் போரைத் துவக்கினார். அந்த உண்மை அம்பலமானவுடனேயே அமெரிக்க அதிபர் க்ளின்டன் தலையிட, நவாஸ் ஷெரீஃப் போர் நிறுத்த அறிவிப்பு செய்தார். அதனால் கோபப்பட்ட ராணுவம் அதிரடி புரட்சி செய்து, ஷெரீஃபை பதவி நீக்கம் செய்து, முஷாரஃப் தலைமையில் ஆட்சியைக் கைப்பற்றியது.
உயிருக்குப் பயந்து ஷெரீஃப் நாட்டை விட்டே ஓடி சௌதி அரேபியாவில் தஞ்சம் புகுந்தார். 2007 -ல் ஷெரீஃப் நாடு திரும்பி, 2008 தேர்தலில் நின்றார். அந்தத் தேர்தலில் பெனசீர் பூட்டோவின் கட்சி வெற்றி பெற்றது. அதற்குப் பிறகு 2013 - ல் முதல்முதலாக நேர்மையாக நடந்த தேர்தலில் நவாஸ் ஷெரீஃப் மகத்தான வெற்றி பெற்று பிரதமரானார். 2016 - ஆம் ஆண்டு பனாமா தீவு ரகசிய கம்பெனிகளின் ஆவணங்கள் அம்பலமானபோது, அதில் ஷெரீஃப் குடும்பத்துக்கு லண்டனில் வீடு மற்றும் சொத்துக்கள் இருப்பதாகத் தெரிய வந்தது. அதை விசாரிக்க, ராணுவத்தின் விருப்பத்திற்கேற்ப, உச்ச நீதிமன்றம் ஒரு குழுவை அமைத்தது. அதன் அறிக்கையின் அடிப்படையில் ஊழல் வழக்கு தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பே, அவரைக் குற்றவாளி என்று அறிவித்து ஷெரீஃப் தேர்தலில் நிற்க தடை விதித்தது.
சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பு வந்தவுடன், தற்போது லண்டனில் இருக்கும் ஷெரீஃப், நான் பாகிஸ்தானை நேசித்ததற்கு 10 ஆண்டுகள் சிறை வாசம்தான் வெகுமதி என்றால், நான் பாகிஸ்தானுக்குத் திரும்ப வந்து விலங்கையும், சிறைத் தண்டனையையும் ஏற்றுக் கொள்வேன். சில ராணுவத் தளபதிகளையும், நீதிபதிகளையும் அடிமைப்படுத்தியிருக்கும் பாகிஸ்தானை விடுதலை செய்யும் வரை போராடுவேன்" என்று கூறியிருக்கிறார்.
ஷெரீஃப் மீது ஏன் இந்த வெறுப்பு?
பாகிஸ்தான் ராணுவம் ஏன் ஷெரீஃபை வெறுக்கிறது? அவர் இஸ்லாமிய தீவிரவாதிகளைக் கட்டுப்படுத்த முயற்சி செய்தார்; ராணுவத்தை எதிர்த்து கார்கில் போரை நிறுத்தினார்; இந்தியாவுடன் நல்லுறவை விரும்பினார்; 1993 மும்பை பயங்கரவாதத் தாக்குதலை பாகிஸ்தான்தான் செய்தது என்பதை சமீபத்தில் ஒப்புக் கொண்டார்; அவருடைய ஆட்சியில் ராணுவத்தின் செல்வாக்கைக் குறைக்க முயற்சி செய்தார். அதனால்தான் பாகிஸ்தானின் ராணுவமும், பாகிஸ்தானின் தீவிரவாதிகளும் ஷெரீஃபை வெறுக்கிறார்கள். பெரும்பான்மை மக்களின் ஆதரவு பெற்ற பிரபல அரசியல் கட்சியான முஸ்லிம் லீக்கையும், ஷெரீஃபையும் ஒழித்து விட்டு, முன்னாள் கிரிக்கெட் வீரரான இம்ரான்கான் தலைமையில் நடக்கும் பாகிஸ்தான் தெஹ்ரீக் - ஏ - இன்ஸாஃப் கட்சியை தன் கைப்பொம்மையாக பதவியில் அமர்த்த பாகிஸ்தான் ராணுவம் திட்டமிட்டிருக்கிறது.
இம்ரான்கான் பதவிக்கு வந்தால், பாகிஸ்தானை தீவிரவாதிகளின் கையில் ஒப்படைத்து விடுவார் என்று அவருடைய முன்னாள் மனைவியே கூறியிருக்கிறார். ராணுவத்திற்கேற்ப ஆட்சி செய்வேன் என்று இம்ரான்கான் கூறியிருக்கிறார். பாகிஸ்தானின் ராணுவமும், தீவிரவாதிகளும் ஏன் ஷெரீஃபை ஒதுக்கி, இம்ரான்கானை அரியணையில் அமர்த்த முயற்சி செய்கிறது என்பது புரிந்து கொள்ளக் கூடியதே. இப்படி இருந்தும் கருத்து கணிப்புகள் ஷெரீஃப் கட்சிதான் முன்னிலையில் இருப்பதாகக் கூறுகின்றன.
ராணுவத்துக்கென்று ஒரு நாடு பாகிஸ்தான்
மறைமுகமாக பாகிஸ்தானின் அரசை மிரட்டி ஆண்டு வந்த ராணுவம், நேரடியாகவே தன் செல்வாக்கைப் பயன்படுத்தி, ஷெரீஃபை நீதிமன்றத்தின் மூலமாகப் போட்டியிலிருந்து விலக்கி, இம்ரான்கான் கையில் பாகிஸ்தானை ஒப்படைக்க மும்முரமாக வேலை செய்து வருகிறது. ஏற்கெனவே இஸ்லாமிய தீவிரவாதிகளிடம் சிக்கியிருக்கும் பாகிஸ்தான், அவர்களை ஊக்குவிக்கும் இம்ரான்கான் பதவிக்கு வந்தால், பாகிஸ்தான் அராஜகத்தை நோக்கிச் செல்லும் என்பதில் சந்தேகமேயில்லை. அதை பாகிஸ்தானிய ராணுவம் விரும்புகிறது.
அராஜகம் உருவானால்தானே, ராணுவத்தினால் தான் அமைதியை நிலைநாட்ட முடியும் என்று பாசாங்கு செய்து, ஆட்சியைக் கைப்பற்ற முடியும். பாகிஸ்தானிய ராணுவத்தின் கையில் ஆயுதங்கள் மட்டும் இல்லை; லஞ்ச - லாவண்யங்கள் மூலமாக பாகிஸ்தான் ராணுவத்தின் ஆளுமையில் அறக் கட்டளைகள் உள்ளன. பாகிஸ்தான் பங்குச்சந்தையின் 70 சதவிகிதப் பங்குகளை அவை வைத்திருக்கின்றன. பாகிஸ்தானின் பொருளாதாரமே ராணுவத்தின் கையில்.
எல்லா நாடுகளுக்கும் ராணுவம் இருக்கிறது. ஆனால், ராணுவத்துக்காக இருக்கிற ஒரு நாடு பாகிஸ்தான் மட்டுமே. ராணுவம் இல்லையென்றால், பாகிஸ்தானை பாரதம் விழுங்கி விடும் என்கிற அச்சத்தை 33 ஆண்டுகளாக ராணுவ ஆட்சியும், தீவிரவாத இயக்கங்களும் பாகிஸ்தானியர் மனதில் உருவாக்கியிருக்கிறது. எனவே, இந்தியாவை எதிர்ப்பதே பாகிஸ்தானின் தேசியமாகவும் மாறியிருக்கிறது. அதனால்தான் பாகிஸ்தானும் இந்தியாவும் ஒரே சமயத்தில் விடுதலை அடைந்தாலும், பாகிஸ்தானில் இன்று வரை ஜனநாயகம் வேரூன்றவில்லை. ராணுவம் மட்டுமே ஒரு நாட்டை அமைதியாகவும், ஒற்றுமையாகவும் வைத்திருக்க முடியாது. இப்படி மக்கள் செல்வாக்குள்ள தலைவர்களையும் கட்சிகளையும் அடக்கி, ராணுவம் நேர்முகமாகவும், மறைமுகமாகவும் தொடர்ந்து ஆட்சி நடத்தினால், விரைவிலேயே பாகிஸ்தான் சிதறிப் போவதற்கும் வாய்ப்பு இருக்கிறது.
-Thuglak

No comments: